தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு: ஊரடங்கை 14 நாள் நீட்டிக்க வேண்டும் - அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதால், ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்து இருக்கிறது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு உள்ளது.
அதில் ஒரு நடவடிக்கையாக, கொரோனா தொற்றுக்கான சிகிச்சை வழிமுறைகளை வகுக்கவும், சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் தடுப்பு முறைகளை கண்காணித்து, தமிழகத்தில் அவற்றை பயன் படுத்துவது பற்றிய வழிகாட்டியை தயார் செய்யவும் 19 டாக்டர் களை கொண்ட நிபுணர் குழு உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் நிபுணர் குழுவில் இடம் பெற்றுள்ள டாக்டர்களுடன் முதல்-அமைச்சர் உரையாடினார்.
சென்னை, வேலூர், தூத்துக்குடி, ஈரோடு மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுடன் 2 மணி நேரம் ஆலோசனை நடந்தது.
இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு
ஆலோசனைக்கு பின்னர் குழுவில் இடம் பெற்றுள்ள தேசிய தொற்று நோய் ஆராய்ச்சி மைய (ஐ.சி.எம்.ஆர்.) டாக்டர் பிரதிபா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்
அப்போது அவர் கூறியதாவது:-
நான் இந்த மருத்துவ நிபுணர் குழுவின் பிரதிநிதியாக இருக்கிறேன். இந்த கூட்டத்தில் 17 நிபுணர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதனும் அங்கிருந்து பேசி முதல்-அமைச்சரிடம் தனது கருத்துகளை கூறி இருக்கிறார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துள்ள முயற்சிகள் நன்றாக உள்ளன. இதை அனைவருமே பாராட்டினார்கள்.
டாக்டர்களின் பாதுகாப்பு
தமிழகத்தில் பொது சுகாதார முறை பலம் வாய்ந்ததாக உள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகளை நல்ல விதமாக தயார் நிலையில் வைத்து உள்ளனர்.
கொரோனாவை எதிர் கொள்வதில் டாக்டர்கள்தான் முன்னிலையில் நின்று பணியாற்றுகின்றனர். அவர் கள் மட்டுமல்லாமல் செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதார பணியாளர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது பற்றியும் இதில் விவாதிக்கப்பட்டது.
என்னதான் நடவடிக்கை எடுத்திருந்தாலும், தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. கடந்த ஒரு வாரத்தை கவனித்தால் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இருப்பது தெரியும்.
எனவே இந்த ஊரடங்கை இன்னும் 14 நாட்களுக்கு நீட்டிக்கலாம் என்று அனைத்து மருத்துவ நிபுணர்களும் கருதுகின்றனர். இதுதான் இந்த நிபுணர் குழுவின் பரிந்துரையாகவும் உள்ளது.
இந்த 14 நாள் கால கட்டத்தில் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறி உள்ளனர். தற்போதுள்ள அனைத்து தொற்று நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களை பரிசோதித்து சோதனை முடிவுகளை ஆராய வேண்டும். அந்த முடிவை பதிவு செய்து வைத்துக் கொண்டு ஆராய்ந்து பின்னர், 2 வாரங்கள் கழித்து ஒரு நிலையான முடிவை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story