பொதுத்துறை நிறுவனங்களில் பணியிட மாற்றங்களை நிறுத்த வேண்டும் - ஜி.கே.வாசன் எம்.பி. கோரிக்கை


பொதுத்துறை நிறுவனங்களில் பணியிட மாற்றங்களை நிறுத்த வேண்டும் - ஜி.கே.வாசன் எம்.பி. கோரிக்கை
x
தினத்தந்தி 11 April 2020 8:00 PM GMT (Updated: 11 April 2020 7:52 PM GMT)

பொதுத்துறை நிறுவனங்களில் பணியிட மாற்றங்களை நிறுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு தொடர்பான அனைத்து மருத்துவக் குழுக்களும் தற்போது பொதுமக்களுக்கு அவசர கால ஆதரவை வழங்கி வருகின்றன. இந்த அசாதாரண சூழ்நிலையில் அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களாகிய ஐ.ஓ.சி.எல்., எச்.பி.சி.எல்., பி.பி.சி.எல்., பி.எஸ்.என்.எல். போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவிலும் பதவி உயர்வு மற்றும் பணி இட மாற்றக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் தற்போதைய மிக நெருக்கடியான சூழ்நிலையில் பொதுத் துறையில் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்தால், அவர்களும் அவர்களது குடும்பமும் உடல் மற்றும் மன ரீதியாக அச்சத்தையும், சிரமத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

எனவே மத்திய அரசு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்ற வேளையில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களை பணியிட மாற்றம் செய்வதை தற்காலிகமாக தவிர்த்து அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story