கொரோனா வைரசுக்கு எதிராக ஓமியோபதி மருந்து: டாக்டரின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனா வைரசுக்கு எதிரான மருந்து ஓமியோபதி மருத்துவத்தில் உள்ளது என்ற திருப்பூர் டாக்டரின் கோரிக்கையை பரிசீலித்து விரைவாக முடிவு எடுக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
திருப்பூர் ஓமியோபதி கிளினிக் நடத்தி வருபவர் டாக்டர் கிங் நார்சீஸ்சஸ். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
அரசு ஓமியோபதி டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர், திருப்பூரில் தனியாக ஆஸ்பத்திரி நடத்தி வருகிறேன். மனித உடலுக்கு எதிர்ப்பு சக்தி தருவதுடன், கொரோனா வைரசுக்கு எதிராக செயல்பட கூடிய மருந்து ஓமியோபதி மருத்துவத்தில் உள்ளது. ‘ஆர்சனிகம் ஆல்பம்-30‘ என்ற ஓமியோபதி மருந்து, கொரோனா வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை மனித உடலில் ஏற்படுத்தும். இந்த மருந்து தெலுங்கானா மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளால், அம்மாநில மக்களுக்கு வழங்குகின்றன.
இந்த மாத்திரையை வெறும் வயிற்றில் 3 நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். அதன்பின்னர் ஒரு மாதம் கழித்து மீண்டும் இதேபோல வெறும் வயிற்றில் மாத்திரையை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால், இந்த கொரோனா வைரசை நாம் அழிக்க முடியும்.
இந்த மாத்திரையை மக்களுக்கு வழங்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த ஜனவரி 29-ந்தேதி மற்றும் மார்ச் 5-ந்தேதி கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, என் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், ‘இதுபோன்ற கோரிக்கைகளை பரிசீலிப்பதற்காக சுகாதாரத்துறை ஒரு தொழில்நுட்பக் குழுவை அமைத்துள்ளது. அந்த குழு இவரது கோரிக்கையை பரிசீலிக்கும்’ என்றார்.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ‘மத்திய அரசு நியமித்துள்ள தொழில்நுட்பக் குழு முன்பு மனுதாரர் ஆஜராகி, கொரோனா வைரசுக்கு எதிராக ஓமியோபதி மருத்துவத்தில் உள்ள மருந்துகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். இவரது விளக்கத்தின் அடிப்படையில், தொழில்நுட்பக் குழு பரிசீலித்து தகுந்த முடிவினை விரைவாக எடுக்கவேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story