தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது - தலைமைச் செயலாளர் பேட்டி


தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது - தலைமைச் செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 12 April 2020 4:45 AM IST (Updated: 12 April 2020 2:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என்று தலைமைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்தார்.

சென்னை, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தமிழகத்தில் நிலவிவரும் சட்டம்-ஒழுங்கு நிலைகுறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டம் முடிந்ததும், மாலை 5.10 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். தலைமைச் செயலாளர் க.சண்முகமும் பங்கேற்றார்.

அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று மற்றும் தடுப்பு பணிகளின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், ஊரடங்கு உத்தரவின்போது சட்டம்-ஒழுங்கு எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்தும் ஆராயப்பட்டது. முக்கியமாக, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் தலைமைச் செயலாளர் க.சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக பல்வேறு வல்லுநர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பிரதமருடன் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது, 2 வார காலம் ஊரடங்கை நீட்டிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆரோக்கிய சேது செயலியை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும்படி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பிரதமர், கொரோனா நோய் பாதிப்புகளை பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என வகைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை ஒரு மாநிலம் மட்டுமே முடிவு செய்தால் முழு பயன் அளிக்காது. எனவே இது பற்றி தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. இதுபற்றிய முடிவை பிரதமர் மோடி அறிவிப்பார். அதை தமிழக அரசு முழுமையாக ஏற்று செயல்படுத்த முடிவு செய்து உள்ளது. பிரதமரின் அறிவிப்பை பொறுத்து தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படும்.

கொரோனா நோயை கண்டறியும் பரிசோதனைக்கு தற்போது, பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான கருவி 15 ஆயிரம் எண்ணிக்கையில் நம்மிடம் உள்ளது.

தமிழகத்தில் 47 ஆயிரத்து 56 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். தற்போது, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக அனுமதி கிடைத்து உள்ளது. கன்னியாகுமரி, தஞ்சாவூர், வேலூர் ஆகிய 3 அரசு மருத்துவமனைகளுக்கும் அனுமதி வழங்க கேட்டுள்ளோம்.

இதுவரை கொரோனா பரிசோதனை 9,527 பேருக்கு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில், 911 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இன்று (நேற்று) ஒரே நாளில் மட்டும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்து உள்ளது. 485 பேரின் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம்.

கொரோனா நோய்க்கு ஈரோட்டில் ஒருவர் இறந்து உள்ளார். இதனால், தமிழகத்தில் கொரோனா நோய் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து இருக்கிறது. 24 லட்சம் குடும்பங்கள் நோய் அறிகுறி உள்ளதா என்ற கண்காணிப்பில் உள்ளன.

4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்க சீனாவுக்கு ஆர்டர் கொடுத்து உள்ளோம். முதற்கட்டமாக 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தருவதாக கூறி உள்ளார்கள்.

கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் 29 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஊரடங்கு உத்தரவால் மக்கள் வெளியே வர முடியாத நிலையில், 10 லட்சம் மளிகை பொருட்கள் பைகளை ரேஷன் கடைகள் மூலம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

விவசாயிகளிடம் தேக்கம் அடைந்துள்ள விளை பொருட்களை விற்பனை செய்ய வேளாண் துறை அதிகாரிகள் நேரில் சென்று போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அரசு கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள விளை பொருட்களுக்கு முதலில் 50 சதவீத தொகையை கொடுக்க வேண்டும் என்றும், மீதமுள்ள தொகையை ஊரடங்கு முடிந்த பிறகு விளை பொருளை விற்பனை செய்து வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story