கொரோனா தொற்று பயம்: அக்கம் பக்கத்து வீட்டாரிடம் பேச பயப்படும் மக்கள் - தள்ளிநின்று நலம் விசாரித்துக் கொள்கிறார்கள்


கொரோனா தொற்று பயம்: அக்கம் பக்கத்து வீட்டாரிடம் பேச பயப்படும் மக்கள் - தள்ளிநின்று நலம் விசாரித்துக் கொள்கிறார்கள்
x
தினத்தந்தி 13 April 2020 1:33 AM IST (Updated: 13 April 2020 1:33 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பயம் காரணமாக அக்கம் பக்கத்து வீட்டாரிடம் கூட மக்கள் பேச பயப்படுகிறார்கள். ஒருவருக்கு ஒருவர் தள்ளி நின்றே நலம் விசாரித்துக் கொள்கிறார்கள்.

சென்னை, 

உலக நாடுகளை பயத்தில் உறைய வைத்திருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவில் அதன் தாக்கத்தை ஆழமாக வேரூன்று வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. கொரோனாவுக்கு பயந்து மக்கள் வீடுகளிலேயே முடங்கி வருகிறார்கள். வெயிலுக்கு பயந்தது போக, இந்த கோடை காலத்தில் வெளியே சுற்ற பயந்தும் வீடுகளிலேயே மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

கொரோனா பயம் காரணமாக அக்கம் பக்கத்து வீட்டாரிடம் கூட பேச மக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். அருகே வசிப்பவர்களை கண்டால் பேச நேரிடுமே என்பதால், கண்டும் காணாதது போல செல்வதை பார்க்க முடிகிறது.

மாலை நேரம் ஆனாலே போதும் ஒவ்வொரு வீட்டு வாசற்படிகளும் ஊர்வம்பு பேசும் இடமாக மாறிவிடுவது வழக்கம். வாசற்படிகளில் பெண்கள் அமர்ந்து கதை பேசி அரட்டை அடிப்பதும் சகஜம். ஆனால் தற்போது அந்த நிலைமையை பார்க்க முடிவதில்லை. மக்கள் அருகருகே சென்று பேசுவது என்ன? பார்த்து கொள்ளக்கூட பயப்படுகிறார்கள். இதனால் அரட்டை தலமான வீட்டு வாசற்படிகள் தற்போது அமைதியாக உள்ளன.

கூடு விட்டு கூடு தாவுவது போல, மாடி விட்டு மாடி அரட்டை அடிப்பதையே பார்க்க முடிகிறது. பெண்களில் பலர் செல்போனில் தங்களது தோழிகளுடன் அரட்டை அடிப்பதையும் காணலாம். முடிந்தவரை தள்ளி நின்றே நலம் விசாரித்துக்கொள்ளும் நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.

அக்கம் பக்கத்து வீடுகளில் கூட குழந்தைகளை நெருங்க விடாமல் பார்த்து கொள்கிறார்கள். கேபிள்காரர்கள், குடிநீர் கேன் வினியோகிப்பவர்கள், பூ வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் என யார் வந்தாலும் கதவை திறக்காமல் வியாபாரத்தை முடித்து கொள்கிறார்கள். வீடுகளிலேயே மக்கள் முடங்கி கிடப்பதால், எந்நேரமும் டி.வி.க் களுக்கு ஓய்வு கிடைப்பது கிடையாது. என்னதான் புழுக்கமாக இருந்தாலும் வீட்டை விட்டு வெளியே வர மனம் மறுக்கிறது.

இதனால் இயல்பு வாழ்க்கையை மக்கள் தொலைத்து விட்டனர். ஆனாலும் எப்போதாவது நிலைமை மாறும் என்று தங்களை தாங்களே சமாதானம் செய்து கொள்கிறார்கள்.

தங்கள் வீடுகளில் ஏதாவது பலகாரம் செய்தால் அதை அருகருகே வசிப்போருக்கு வழங்கி மகிழ்வது மக்களின் வழக்கம். தற்போது என்னதான் வீட்டில் விதவிதமான பலகாரங்கள் செய்தாலும் அதை அக்கம் பக்கத்து வீடுகளுக்கு கொடுக்க மனம் வருவது கிடையாது. கொடுத்தாலும் வாங்கவும் அண்டை வீட்டார் யோசிக்கிறார்கள்.

இப்படி கொரோனா மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு கடுமையான வேட்டு வைத்து விட்டது. கொரோனாவால் ஊர் மட்டும் அடங்கவில்லை, மக்களின் இயல்பான எண்ண ஓட்டங்களும், பழக்க வழக்கங்களும் மாறிவிட்டன என்பதே நிதர்சன உண்மையாக இருக்கிறது.

Next Story