கொரோனாவால் பலியானவர் உடல் அடக்கத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி - சுகாதாரத்துறை உத்தரவு


கொரோனாவால் பலியானவர் உடல் அடக்கத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி - சுகாதாரத்துறை உத்தரவு
x
தினத்தந்தி 13 April 2020 3:00 AM IST (Updated: 13 April 2020 1:52 AM IST)
t-max-icont-min-icon

“கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை தகனம், அடக்கம் செய்யும் இடத்தில் மிக நெருங்கிய உறவினர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்” சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை, 

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க ஒவ்வொரு நாடுகளும் போராடி வருகின்றன.

இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் 11 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

அவ்வாறு உயிரிழப்பவர்களின் உடலை சுகாதாரப் பணியாளர்கள் எவ்வாறு கையாள வேண்டும்?, இறந்தவர்களின் உடலை தகனம், அடக்கம் செய்யும் இடங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்து சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

முகத்தை திறந்து காட்டலாம்

* இறந்தவர் உடலை அதற்கென உள்ள பிளாஸ்டிக் பையில் வைத்து முழுமையாக சுற்ற வேண்டும். அந்த பிளாஸ்டிக் பை மீது ஒரு சதவீதம் சோடியம் ஹைப்போ குளோரைடு கொண்டு தெளிக்க வேண்டும். இறந்தவர்களின் உடலை கையாளுபவர்கள் சர்ஜிகல் முகக்கவசம், கையுறை அணிந்து இருக்க வேண்டும்.

* இறந்தவர் உடலை தகனம் மற்றும் அடக்கம் செய்யும் இடத்தில் ஒப்படைத்த பின், உடலை கொண்டு சென்ற வாகனத்தை ஒரு சதவீதம் சோடியம் ஹைப்போ குளோரைடு கொண்டு தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்.

* இறந்தவர் உடலை உறவினர்கள் பார்க்க விரும்பினால், பணியாளர் முகத்தை மட்டும் திறந்து காட்டலாம். பணியாளரை தவிர வேறு யாரும் இறந்தவர் உடலை தொட அனுமதிக்க வேண்டாம். இறந்தவரின் உடலை தொடுவதற்கு அவசியம் இல்லாத மத சம்பந்தமான சடங்குகளை செய்ய அனுமதிக்கலாம்.

மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதி

* இறந்தவரின் உடலை குளிப்பாட்டுதல், கட்டி அணைத்தல், முத்தம் கொடுத்தல் போன்றவற்றை செய்ய அனுமதி இல்லை. தகனம், அடக்கம் முடிந்ததும் அந்த இடத்தில் இருந்த பணியாளர்கள், இறந்தவரின் உறவினர்கள் சுகாதார முறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.

* இறந்தவரை தகனம் செய்தபின் வரும் சாம்பலை சடங்குகளுக்காக குடும்பத்தினருக்கு வழங்கலாம். அதில் எந்த ஆபத்தும் இல்லை. கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் விதமாக தகனம், அடக்கம் நடக்கும் இடத்தில் மிக நெருங்கிய உறவினர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அவர்களும் சமூக இடைவெளி உள்பட பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றவேண்டும்.

Next Story