கூடாரங்கள் அமைத்து கிருமிநாசினி தெளிக்கக்கூடாது - அரசு உத்தரவு
கூடாரங்கள் அமைத்து கிருமிநாசினி தெளிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில், கூடாரங்கள் அமைத்து அங்கு வரும் மக்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கூடாரங்கள் அமைத்து மக்கள் மீது கிருமிநாசினி தெளிப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமே தவிர கிருமிகள் சாகாது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதையடுத்து இந்த கூடாரங்களை அமைக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, அனைத்து சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடாரங்கள் அமைத்து பொதுமக்கள் மீது கிருமிநாசினி தெளிப்பதால் பொதுமக்களிடம் போலியான பாதுகாப்பு உணர்வு ஏற்பட்டு, கை கழுவுவதின் முக்கியத்துவத்தை மறந்துவிட வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் மீது கிருமிநாசினி தெளிப்பதால் அவர்களது உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலும் இதனால் நோய் கிருமிகள் இறப்பதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவு. எனவே உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி, கூடாரங்கள் அமைத்து பொதுமக்கள் மீது கிருமிநாசினி தெளிக்கும் பணி உடனடியாக நிறுத்த வேண்டும்.
இதையடுத்து ஆங்காங்கே நிறுவப்பட்டிருந்த கிருமிநாசினி பாதைகளின் பயன்பாடுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. பல இடங்களில் தடுப்புகள் கொண்டும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story