தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்க தடை இல்லை; தமிழக அரசு விளக்கம்


தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்க தடை இல்லை; தமிழக அரசு விளக்கம்
x
தினத்தந்தி 13 April 2020 1:21 PM IST (Updated: 13 April 2020 1:21 PM IST)
t-max-icont-min-icon

தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்க தடை இல்லை என தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பிற அமைப்புகளை சார்ந்த அனைவரும், ஊரடங்கு அமலில் உள்ள இத்தருணத்தில் பொருட்களை நேரடியாக மக்களுக்கு வழங்கி, வைரஸ் தொற்றுக்கு வழிவகுப்பதை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவ்வாறு உதவி செய்ய விரும்பினால், பொருட்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடமோ அல்லது மாநகராட்சியாக இருந்தால் மாநகராட்சி கமிஷனரிடமோ, நகராட்சியாக இருந்தால் அந்தந்த நகராட்சி கமிஷனரிடமோ, பேரூராட்சியாக இருந்தால் செயல் அலுவலரிடமோ அல்லது ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ வழங்கலாம்.

அவர்கள் அதை ஏழை, எளிய மக்களுக்கு சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள். எனவே, இதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பும் நல்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால், அரசின் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கருதி, அவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கையை எடுக்க மாவட்ட கலெக்டர்களும், காவல்துறை அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை உணவு வழங்க அரசு விதித்த தடைக்கு எதிராக தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசு அளித்துள்ள விளக்கத்தில், சூழ்நிலைக்கு ஏற்ப தன்னார்வலர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டது.  தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் என யாருக்கும் தடை விதிக்கவில்லை.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கையாகவே ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள் நேரடியாக உதவ கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.  பேரிடருக்கு உதவுவது போன்று தன்னார்வலர்கள் நேரடியாக உதவ சென்றால் அது கொரோனா பரவலுக்கு வழிவகுத்து விடும் என தெரிவித்து உள்ளது.

ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்கு அரசு தடை விதித்தது போல் சித்தரிக்கப்படுகிறது.  அரசு எந்தவித அரசியலும் செய்யவில்லை என்றும் விளக்கம் அளித்து உள்ளது.

Next Story