ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மின்சார கட்டணம் செலுத்த மே 6-ந்தேதி வரை அவகாசம் - வாரியம் அதிரடி உத்தரவு


ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மின்சார கட்டணம் செலுத்த மே 6-ந்தேதி வரை அவகாசம் - வாரியம் அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 14 April 2020 1:45 AM IST (Updated: 14 April 2020 1:44 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மின்சார கட்டணம் செலுத்த மே 6-ந் தேதிவரை கால அவகாசம் அளித்து மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சென்னை, 

கொரோனா வைரஸ் பரவுதலால் கடந்த மாதம் 24-ந்தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின்சார இணைப்புகளுக்கு மின்சார கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான காலக்கெடுவை 14-ந்தேதி (இன்று) வரை நீட்டித்து இருந்தது.

இந்தநிலையில், தற்போது மீண்டும் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.

அந்த உத்தரவில் மின்சார வாரியம் கூறியிருப்பதாவது:-

தாழ்வழுத்த மின்சார நுகர்வோர்களின் மின்கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கெடு வருகிற மே 6-ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய தாழ்வழுத்த மின்சார நுகர்வோர்கள் அதற்கு முந்தைய மாத கணக்கீட்டு பட்டியல்படி மின்சார கட்டணம் செலுத்தலாம்.

இவ்வாறு செலுத்திய மின் கட்டணம் பின்வரும் மாத கணக்கீட்டு மின் கட்டணத்தில் சரிகட்டல் செய்யப்படும். (அதாவது ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் செலுத்திய தொகையையே ஏப்ரல் மின்சார கட்டணமாக செலுத்தலாம்). இந்த தொகையை ஆன்-லைன் மூலம் செலுத்தி மின்சார வாரிய கவுண்டர்களுக்கு வருவதை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story