டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக பாலச்சந்திரன் நியமனம் - உடனடியாக பதவி ஏற்பு; அதிகாரிகளுடன் ஆலோசனை
டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக பதவி ஏற்ற அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி அருள்மொழி இருந்து வந்தார். அவர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், புதிய தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கா.பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கா.பாலச்சந்திரன், உடனடியாக சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு நேற்று சென்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பதவி ஏற்றவுடன் கா.பாலச்சந்திரன், டி.என்.பி.எஸ்.சி. செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், உறுப்பினர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, ஒத்திவைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தேர்வு தொடர்பாக, விரைவில் புதிய அட்டவணை வெளியாகும் என்றும் தெரிகிறது.
புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கா.பாலச்சந்திரன் தஞ்சாவூரில் பிறந்தவர். தந்தை காசி அய்யா, தாயார் லட்சுமி. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை தஞ்சாவூரில் முடித்த கா.பாலச்சந்திரன், பழனியில் சப்-கலெக்டராக 1986-ம் ஆண்டு முதல் பணிபுரிய தொடங்கினார். 1994-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் தமிழ்நாடு பிரிவில் நியமனம் செய்யப்பட்டார். 2000-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தர்மபுரி, கன்னியாகுமரி, ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 7 ஆண்டுகள் கலெக்டராக பணிபுரிந்தார்.
சிறுசேமிப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருது பெற்றார். இவர் சமூக நலத்துறை, வேளாண்மைத்துறை, உள்ளாட்சித் துறை, உணவு மற்றும் பாதுகாப்பு துறை, கூட்டுறவுத்துறை, தொழில் துறை, காதி போர்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தொழிலாளர் நலத் துறை ஆகிய துறைகளின் தலைவராகப் பணியாற்றியவர். கடந்த 2 ஆண்டுகளாக வணிக வரி மற்றும் பதிவுத்துறையில் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்தார்.
2018-ம் ஆண்டு பதிவுத் துறையில் முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருதும், 2019-ம் ஆண்டு வணிக வரித்துறையில் முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருதும் பெற்றார்.
Related Tags :
Next Story