சென்னையில் முககவசம் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம்; சென்னை மாநகராட்சி


சென்னையில் முககவசம் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம்; சென்னை மாநகராட்சி
x
தினத்தந்தி 15 April 2020 7:37 AM GMT (Updated: 15 April 2020 7:37 AM GMT)

சென்னையில் முககவசம் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தங்களை காத்து கொள்ள அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தது.  கோவை, திருப்பூர் மாவட்டங்களில் முக கவசம் கட்டாயம் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.

சென்னையிலும் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.  இதுபற்றி சென்னை பெருநகர மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், கடந்த இரு தினங்களுக்கு முன் வெளியிட்டுள்ள உத்தரவில், வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தொற்றுநோய் சட்டம், பொதுசுகாதார சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் உத்தரவிடப்பட்டு உள்ளது. வெளியே பொதுமக்கள் எவ்வளவு நேரம் நடமாடுகிறார்களோ? அதுவரையில் முக கவசம் அணிய வேண்டும்.

இந்த உத்தரவை மீறி முக கவசம் அணியாமல் வெளியே சென்றால், அவர்கள் வெளியில் செல்வதற்காக வழங்கப்படும் அனுமதி பாஸ் ரத்து செய்யப்படும். மேலும் அவர்களுடைய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, 3 மாதங்கள் வைக்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

எனினும், இந்த உத்தரவை மதிக்காமல் பலர் வெளியில் செல்கின்றனர் என தகவல் வெளியானது.  இதனை தொடர்ந்து சென்னையில் முக கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம் வசூல் செய்யப்படும்.  தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 179வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல் துறை நேற்று அறிவித்தது.  இந்த உத்தரவு நேற்று உடனடியாக அமலுக்கு வந்தது.  இதன்பின்பும் பொதுமக்களிடையே போதிய எச்சரிக்கை உணர்வு இல்லை.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நகரங்களில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.  இந்நிலையில், சென்னையில் முககவசம் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேபோன்று முககவசம் அணியாமல் வாகனத்தில் சென்றால் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.  ஓட்டுனர் உரிமம் 6 மாதங்களுக்கு தற்காலிக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

Next Story