கொரோனா பாதிப்பு தடுப்பு பணிக்கு தமிழகத்தில் 2 ஆயிரத்து 215 தற்காலிக சுகாதார ஆய்வாளர்கள் - பொது சுகாதாரத்துறை உத்தரவு


கொரோனா பாதிப்பு தடுப்பு பணிக்கு தமிழகத்தில் 2 ஆயிரத்து 215 தற்காலிக சுகாதார ஆய்வாளர்கள் - பொது சுகாதாரத்துறை உத்தரவு
x
தினத்தந்தி 17 April 2020 9:00 PM GMT (Updated: 17 April 2020 8:28 PM GMT)

கொரோனா பாதிப்பு தடுப்பு பணிக்கு தமிழகத்தில் 2 ஆயிரத்து 215 தற்காலிக சுகாதார ஆய்வாளர்கள் பணி அமர்த்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ ஆய்வாளர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி இந்த பணிக்காக ‘அவுட்சோர்சிங்’ முறையில் 2 ஆயிரத்து 215 சுகாதார ஆய்வாளர்களை பணி அமர்த்த உத்தரவிட்டார். உத்தரவு வருமாறு:-

தமிழக அரசின் அரசாணைபடி கொரோனா தடுப்பு பணிக்காக ஆண் சுகாதார ஆய்வாளர்கள் (2-ம் நிலை) நியமிக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக 42 சுகாதார மாவட்டங்களில் 2 ஆயிரத்து 215 ஆண் சுகாதார ஆய்வாளர்களை அனைத்து துணை பொது சுகாதார இயக்குனர்கள் உடனடியாக பணி அமர்த்த வேண்டும்.

மேலும் இந்த சுகாதார ஆய்வாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். அனைத்து மருத்துவ கல்லூரி ‘டீன்களுக்கும்’, சுகாதார பணிகள் இணை இயக்குனர்களும் தலா 4 சுகாதார ஆய்வாளர்கள் விதம் மருத்துவமனைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிக்காக அனுப்ப வேண்டும். இந்த 42 சுகாதார மாவட்டங்களில், பூந்தமல்லிக்கு 20 பேரும், காஞ்சீபுரத்துக்கு 48 பேரும், திருவள்ளூரில் 80 பேரும், செங்கல்பட்டில் 73 பேரும் உடனடியாக பணி அமர்த்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story