கர்நாடகாவில் ஏப்.20-க்கு பிறகு ஊரடங்கில் சில தளர்வுகள்: எடியூரப்பா அறிவிப்பு


கர்நாடகாவில் ஏப்.20-க்கு பிறகு ஊரடங்கில் சில தளர்வுகள்: எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 18 April 2020 3:12 PM GMT (Updated: 18 April 2020 3:16 PM GMT)

கர்நாடகாவில் ஏப்.20-க்கு பிறகு ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்படும் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும்  மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளை தவிர்த்து பிற இடங்களில், வரும் 20-ஆம் தேதிக்கு பிறகு தொழில் நிறுவனங்கள்  நிபந்தனைகளுடன் செயல்பட மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. 

இந்த நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.   உயர்மட்ட அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த முதல்வர் எடியூரப்பா கூறியதாவது;-  சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள தொழிற்சாலைகள் 30 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படும். எனினும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகள் பொருந்தாது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் வெளியே வர அனுமதி அளிக்கப்படாது. இப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அவர்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து கொடுக்கப்படும்.  மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து அனுமதிக்கப்படாது.  

அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்துக்கு எந்த தடையும் கிடையாது. அதேபோல், கட்டுமானப்பொருட்களான கற்கள், சிமெண்ட், மணல், ஸ்டீல் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை.  கட்டுமானப் பணியாளர்கள், தாங்கள் பணிபுரியும் இடங்களிலேயே தங்க அனுமதிக்கப்படுவார்கள். ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு இருசக்கர வாகனங்கள் செல்ல எந்தத் தடையும் இல்லை. ஆனால், மதுபானக்கடைகள் மே  3 ஆம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை” என்றார்.  கர்நாடகாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 371 ஆக உள்ளது. 

Next Story