ஊரடங்கை மீறி வாகனங்கள் அணிவகுப்பு: சென்னை அண்ணாசாலை மூடப்பட்டது - போக்குவரத்து போலீசார் அதிரடி


ஊரடங்கை மீறி வாகனங்கள் அணிவகுப்பு: சென்னை அண்ணாசாலை மூடப்பட்டது - போக்குவரத்து போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 23 April 2020 11:00 PM GMT (Updated: 23 April 2020 9:10 PM GMT)

ஊரடங்கை மீறி வாகனங்கள் அணிவகுத்ததால் சென்னை அண்ணா சாலையை போக்குவரத்து போலீசார் நேற்று மதியம் மூடினர்.

சென்னை, 

கொரோனா பரவலை தடுப்பதற்கான ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனை மதித்து ஒரு சிலர் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். பலர் ஊரடங்கை உதாசீனப்படுத்தி வருகிறார்கள். ‘எவ்வளவு நேரம் தான் வீட்டிலேயே அடைப்பட்டு கிடப்பது. சிறிது நேரம் ஜாலியாக ஊர் சுற்றி வருவோம்’ என்ற மனப்பான்மையில் இருக்கிறார்கள்.

ஊரடங்கை மதித்து வீடு அடங்காமல் ஊர் சுற்றுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக போலீசார் ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே ஊரடங்கை மதிக்காமல் தேவையின்றி வெளியே சுற்றியதாக தமிழகம் முழுவதும் நேற்று வரையில் மட்டும் 2 லட்சத்து 39 ஆயிரத்து 770 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். வாகன ஓட்டிகள் மீது கைது நடவடிக்கை, வழக்குப்பதிவு, அபராதம் விதிக்கப்படுகிறது. எனினும் வாகனங்கள் நடமாட்டம் குறைந்தபாடு இல்லை.

கொரோனா பாதிப்பில் முதல் இடம் வகிக்கும் சென்னை மாநகரில் வாகனங்கள் பரபரப்புடன் இயங்கி வருகின்றன. உங்கள் வீடு தேடி காய்கறிகள் வரும். உங்கள் வீட்டின் அருகே உள்ள மளிகை கடையில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள் என்று போலீசார் எவ்வளவோ எடுத்து சொன்னாலும், காதில் வாங்கி கொள்ளும் மனநிலையில் பலர் இல்லை.

மக்கள் காய்கறிகள், பழங்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு சிரமப்பட கூடாது என்பதற்காகவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவும் சென்னை மாநகரில் உள்ள மாநகராட்சி பள்ளிகள், மாநகர பஸ்நிலையங்கள், மைதானங்கள் உள்பட இடங்கள் தற்காலிக சந்தைகளாக உருவாக்கி தரப்பட்டு உள்ளது.

ஆனாலும் ‘அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்கிறோம்’ என்ற போர்வையில் மக்கள் பல கி.மீட்டர் தூரம் பயணிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நேரமான மதியம் 1 மணி முடிந்த பின்னரும் வாகனங்கள் நடமாட்டம் அப்படியே இருக்கிறது.

இந்தநிலையில் ஊரடங்கை மீறி முக்கிய சாலைகளில் வாகனங்கள் அணிவகுப்பதை தடுக்கும் நடவடிக்கையாக முக்கிய சாலைகளை மதியம் 1 மணிக்கு மேல் மூடுவதற்கு போக்குவரத்து போலீசார் திட்டமிட்டனர். அதன்படி ஜெமினி மேம்பாலம் அண்ணாசாலை முதல் திருவல்லிக்கேணி வாலாஜா சாலை வரையிலான சாலை பகுதிகள் நேற்று மதியம் 1 மணி முதல் தடுப்புகள் வைத்து மூடப்பட்டன. பக்கவாட்டு சாலைகளும் அடைக்கப்பட்டன.

அப்போது அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் செய்வது அறியாமல் தவித்தனர். தடுப்புகளை திறந்துவிடும்படி சிலர் போலீசாரிடம் மன்றாடினார்கள். ஆனால் போலீசார் திறக்க முடியாது. வேறு வழியாக சுற்றி செல்லுங்கள் என்று திட்டவட்டமாக கூறினார். இதையடுத்து வேறு வழியின்றி வாகன ஓட்டிகள் திரும்பி சென்றனர். அதே நேரத்தில் ஆம்புலன்சு உள்பட அத்தியாவசிய வாகனங்கள் செல்வதற்கு மட்டும் போலீசார் வழி ஏற்படுத்தி தந்தனர்.

அண்ணாசாலை நேற்று மதியம் அடைக்கப்பட்டதால் அப்பகுதி ஆள் அரவரம் இன்றி பாலைவனம் போன்று காட்சி அளித்தது.

சென்னை நகரின் இதய பகுதி எனப்படும் அண்ணாசாலை அடைக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடம் இருக்கிறது என்ற கவலை இல்லாமல் பலர் தேவையின்றி வாகனங்களில் வெளியே சென்று வருகிறார்கள். மார்க்கெட்டுகளுக்கு ஒருவர் மட்டும் சென்று வாருங்கள் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும், ஒரு சிலர் ஏதோ விஷேச நிகழ்ச்சிகளுக்கு செல்வது போன்று குடும்பத்துடன் செல்கிறார்கள். எனவே தற்போது மோட்டார் சைக்கிளில் ஒருவருக்கு மேல் சென்றால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

ஊரடங்கை மீறியதாக சென்னையில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மற்ற மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டாலும், சென்னையில் கொரோனா பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்து ஊரடங்கு முடிந்த பின்னர் தான் பறிமுதல் வாகனங்கள் ஒப்படைக்கப்படும்.

இனி ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை. அதன்படி சென்னையில் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும் முக்கிய சாலைகள் மூட முடிவு செய்யப்பட்டது. தற்போது மதியம் 1 மணிக்கு மேல் சாலைகளை மூடும் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளோம்.

ஊரடங்கை மீறுவோர்கள் மீது மற்ற மாவட்டங்களில் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் மட்டும் விதிக்கப்படுகிறது. இனி சென்னையிலும் ஊரடங்கை மீறுவோர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story