தமிழகத்தில் ஒரே நாளில் 6 குழந்தைகளுக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1,885-ஆக உயர்வு


தமிழகத்தில் ஒரே நாளில் 6 குழந்தைகளுக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1,885-ஆக உயர்வு
x
தினத்தந்தி 26 April 2020 11:00 PM GMT (Updated: 2020-04-27T02:21:32+05:30)

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட 6 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, 

தமிழ்நாட்டின், சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 64 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரசால் பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 60 பேர் சிகிச்சை முடிந்து, குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 6 ஆயிரத்து 621 பேரின் தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 39 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் என 64 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 1,885 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 1,279 ஆண் மற்றும் 606 பெண்கள் உள்ளனர்.

தமிழக மருத்துவமனையில் நேற்று வரை 838 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1,020 பேர் சிகிச்சை முடிந்து, குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 60 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்து 42 வயது ஆண் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா சாவு எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 6 குழந்தைகள் உட்பட 64 பேர் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் 9 வயது சிறுவன் உட்பட 28 பேரும், மதுரையில் இரண்டு 8 வயது சிறுமிகள் மற்றும் 9, 11 வயது சிறுவர்கள் உட்பட 15 பேரும், விருதுநகரில் 7 பேரும், நாமக்கல் மாவட்டத்தில் 5 வயது சிறுவன் உட்பட 4 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும், திருப்பூரில் 2 பேரும், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா நோய் தொற்றால் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், 30 மாவட்டங்கள் அதிக பாதிப்பு உடைய மாவட்டமாகவும்(ஹாட்ஸ்பாட்), 7 மாவட்டங்கள் மிதமான பாதிப்பு உடைய மாவட்டமாகவும், 1 மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்பதால் பச்சை மாவட்டமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்டவர்களில் 59 சிறுவர்கள் மற்றும் 51 சிறுமிகள் என 110 சிறுவர், சிறுமியர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைப்போல் 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களில் 1,062 ஆண்களும், 492 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 157 ஆண்களும், 64 பெண்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story