சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை கேட்ட வழக்கு தள்ளுபடி - மத்திய அரசை அணுக ஐகோர்ட்டு உத்தரவு


சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை கேட்ட வழக்கு தள்ளுபடி - மத்திய அரசை அணுக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 27 April 2020 9:30 PM GMT (Updated: 2020-04-28T01:52:34+05:30)

ஊரடங்கு முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பும்வரை தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணத்தை வசூலிக்க தடை கேட்டு தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதேநேரம், மத்திய அரசை அணுகி நிவாரணம் பெறலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில், முனிகிருஷ்ணன் என்ற விவசாயி பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தற்போது அமலில் உள்ள ஊரடங்கினால், வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் விவசாய விளை பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் அவை தேங்கியும், அழுகியும் கிடக்கிறது.

இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் நிலைமை படுமோசமாக இருக்க, வெந்த புண்ணில் உப்பை அள்ளி போடுவது போல, தேசிய நெடுஞ்சாலைத்துறை, வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணத்தை அதிகரித்து, வசூலிக்கிறது.

இதனால், விளைபொருட்களின் விலையும் மேலும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, கொரோனா வைரஸ் தொற்று முற்றிலும் அழிக்கப்பட்டு, ஊரடங்கு அகற்றப்பட்டு, நாடு இயல்பு நிலைக்கு வரும் வரை சுங்கக்கட்டணத்தை வசூலிக்க தடை விதிக்க வேண்டும். கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் விசாரித்தனர். மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன், நெடுஞ்சாலைகளில் தடையில்லாமல் வாகனங்கள் செல்ல, சாலைகளை பராமரிக்க வேண்டியதுள்ளதால், தேசிய நெடுஞ்சாலை கட்டணம் விதிகளின்படி சுங்கக்கட்டணத்தை வசூலிக்க சட்டப்படியாக அதிகாரம் உள்ளது என்றும் மனுதாரர் மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினால், அதை அரசு கண்டிப்பாக பரிசீலிக்கும் என்றும் வாதிட்டார்.

அதனை தொடர்ந்து, நீதிபதிகள் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:-

செங்கல்பட்டில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச், போக்குவரத்து சீராக செல்லவும் சாலைகளை தரமாக பராமரிக்கவும் இதுபோன்ற கட்டணத்தை வசூலிப்பது அவசியம் என்பதால் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று உத்தரவிட முடியாது என தெரிவித்தது.

இந்த வழக்கிலும் மனுதாரர், அதுபோன்ற கோரிக்கையுடன் இந்த ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற முயற்சிக்கிறார். இதை ஏற்க முடியாது. அவரது வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

அதேநேரம், கொரோனா தொற்று முற்றிலும் அழியும் வரை சுங்கக்கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு மனுதாரர் கோரிக்கை மனு அனுப்பி நிவாரணம் பெறலாம்.

அவ்வாறு மனுதாரரிடம் இருந்து கோரிக்கை மனு வந்தால், அதை மத்திய அரசு விரைவாக பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்க வேண்டும். அதை மனுதாரருக்கு தெரியப்படுத்தவும் வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story