தமிழகத்தில் 52 பேர் பாதிப்பு - சென்னையில் மேலும் 47 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் 52 பேர் பாதிப்பு - சென்னையில் மேலும் 47 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 April 2020 10:15 PM GMT (Updated: 27 April 2020 9:11 PM GMT)

தமிழகத்தில் நேற்று புதிதாக 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியானது. அவர்களில் 47 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

சென்னை, 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 பேர் கொரோனா நோய் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937-ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் சென்னை, மதுரை, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களை தவிர வேறு எந்த மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு புதிதாக நேற்று ஏற்படவில்லை.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7 ஆயிரத்து 176 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 52 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,937 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று பாதிக்கப்பட்ட 52 பேரில், சென்னையில் 13 வயது சிறுவன் உள்பட 47 பேர் அடங்குவார்கள். மதுரையில் 4 பேரும், விழுப்புரத்தில் ஒரு குழந்தையும் நேற்று பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,312 ஆண்களும், 625 பெண்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 111 பேரும், 13 வயது முதல் 60 வயது வரை 1,600 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 226 பேரும் கொரோனா வைரசின் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 29 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டவையாகவும் (ஹாட்ஸ்பாட்), 7 மாவட்டங்கள் மிதமாக பாதிக்கப்பட்டவையாகவும், ஒரு மாவட்டம் பாதிக்கப்படாமல் பச்சை மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

81 பேர் ‘டிஸ்சார்ஜ்’

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 1,101 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 81 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதில் சென்னை அரசு மருத்துவமனைகளில் மட்டும் 34 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story