டெல்டா மாவட்டங்களுக்கு தடையில்லா மின்சாரம்: நெய்வேலி-கடலங்குடி இடையே புதிய மின்பாதை - செயல்பாட்டுக்கு வந்ததாக அதிகாரிகள் தகவல்


டெல்டா மாவட்டங்களுக்கு தடையில்லா மின்சாரம்: நெய்வேலி-கடலங்குடி இடையே புதிய மின்பாதை - செயல்பாட்டுக்கு வந்ததாக அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 28 April 2020 7:30 PM GMT (Updated: 28 April 2020 7:21 PM GMT)

டெல்டா மாவட்டங்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வினியோம் செய்வதற்காக அமைக்கப்பட்ட நெய்வேலி-கடலங்குடி இடையே புதிய மின்பாதை செயல்பாட்டுக்கு வந்ததாக அதிகாரிகள் கூறினார்கள்.

சென்னை,

நெய்வேலி துணை மின்நிலையம் மற்றும் கடலங்குடி இடையேயான 77.31 கிலோ மீட்டர் நீள 230 கிலோ வோல்ட் புதிய மின்பாதை கடந்த 27-ந்தேதி செயலாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையேயும் ஏற்கனவே நடைபெற்று கொண்டிருந்த பணிகளின் இறுதிகட்ட பணிகள் போர்க்கால அடிப்படையில் கடந்த ஒருவார காலமாக மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஏதுவாகும்.

இத்திட்டம் ரூ.100.82 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின்பாதை நெய்வேலி மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு இடையேயான இரண்டாவது மின் வழித்தடமாகும். 

நிறுவப்பட்ட இந்த மின்பாதையின் காரணமாக டெல்டா மாவட்டங்களிலுள்ள 230 கி.வோ. மின்பாதைகளை நெகிழ்திறனுடன் இயக்க ஏதுவாகும்.

டெல்டா மாவட்டத்திலுள்ள மின்னழுத்தத்தை மேம்படுத்தி சீராக வழங்க இயலும். இது விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

மேற்கண்ட தகவலை மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story