கொரோனா பரவுவதை தடுக்க “அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு இல்லையே” - எடப்பாடி பழனிசாமி கவலை


கொரோனா பரவுவதை தடுக்க “அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு இல்லையே” - எடப்பாடி பழனிசாமி கவலை
x
தினத்தந்தி 28 April 2020 10:30 PM GMT (Updated: 28 April 2020 9:52 PM GMT)

“கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு இல்லையே” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவலை தெரிவித்தார்.

சென்னை, 

கொரோனாவை தமிழ்நாட்டில் இருந்து விரட்டியடிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் நாட்கள் தான் கடந்து செல்கின்றனவே தவிர, கொரோனா தமிழ்நாட்டைவிட்டு ஓடியபாடு இல்லை. இவ்வளவுக்கும் தமிழக அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா மருத்துவ பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. 

ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் மீறி, கொரோனா பாதிப்பு சென்னை உள்பட சில மாவட்டங்களில் தினமும் புதிது புதிதாக உருவாகிக் கொண்டிருக்கிறது. 7 மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக ஒருவருக்குக்கூட புதிதாக தொற்று இல்லை என்பது இந்த வேதனையிலும் ஆறுதல் அளிக்கிறது.

தமிழக அரசை பொறுத்தமட்டில் இந்த நேரத்தில் எப்படியும் கொரோனாவை கட்டுப்படுத்தியே தீரவேண்டும் என்ற வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எப்படியாவது ஊரடங்கை தளர்த்த வேண்டும், மக்களுக்கு சகஜ வாழ்க்கை திரும்ப வேண்டும், எல்லா தொழிற்சாலைகளும், வர்த்தக நிறுவனங்களும், அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் இயங்கவேண்டும் என்றால், அனைத்து மாவட்டங்களும் பசுமை பகுதிகளாக அறிவிக்கப்பட்டால் தான் முடியும் என்ற நிலை இருக்கிறது.

ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், அதிகம் பாதிக்கப்பட்ட சிவப்பு மண்டலங்களாகவே பெரும்பான்மையான மாவட்டங்கள் இன்னும் இருக்கின்றன. இந்த மாவட்டங்கள் எல்லாம் குறைவாக பாதிக்கப்பட்ட ஆரஞ்சு மண்டலங்களாக மாறி, அதற்குப்பிறகு பச்சை மண்டலங்களாக மாறினால்தான் வழிபிறக்கும். 14 நாட்கள் எந்த பாதிப்பும் இல்லை என்றால்தான், சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறமுடியும்.

அடுத்த 14 நாட்களில் பாதிப்பு இல்லை என்றால்தான் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலமாக மாறமுடியும். இதற்கெல்லாம் அரசு நடவடிக்கையும் வேண்டும். அதற்கு மேலாக பொதுமக்களின் ஒத்துழைப்பும் கண்டிப்பாக வேண்டும்.

நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘தினத்தந்தி’ செய்தியாளரிடம் இது குறித்து கூறியதாவது:-

“அரசு எவ்வளவோ முயற்சி எடுக்கிறது. அவையெல்லாம் வெற்றி பெற வேண்டும் என்றால் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். ஆனால் பொதுமக்களில் பெரும்பான்மையானோர் கொரோனாவை பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. பல மாவட்டங்களில் நிலைமை பரவாயில்லை. 7, 8 மாவட்டங்களில் 10 நாட்களுக்கு மேலாக எந்த புதிய தொற்றும் ஏற்படவில்லை.

ஆனால், சென்னையில் தான் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது. தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவித்து தடுப்பு காவலும் போட்டு இருக்கிறோம். ஆனால் அதையும் மீறி சிலர் வெளியே வந்து விடுகிறார்கள். அந்தப் பகுதிகளுக்கும் போகிறார்கள். இப்போது சில நோய் தொற்றுகள் இவ்வாறு தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியே வந்தவர்களால்தான் பரவி இருக்கிறது என்று கணடுபிடிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்யச் சென்றால் வீட்டில் பலர் இருப்பது இல்லை. எங்கே போயிருக்கிறார்கள்? என்று கேட்டால், வீட்டில் இருப்பவர்களுக்குக்கூட தெரிவதில்லை.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் அர்த்தமே இல்லாமல் இன்னும் ஏராளமானோர் தேவையில்லாமல் வெளியே சுற்றி கொண்டிருக்கிறர்கள். வீட்டு வாசலிலேயே எல்லா பொருட்களையும் குறைந்தவிலையில் கொண்டு வந்து கொடுக்க அரசு நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும், ‘கோயம்பேடு போய்தான் வாங்குவேன்’ என்று பிடிவாதமாக பெரும்கூட்டமாக செல்கிறார்கள். பொதுமக்கள் கொரோனாவின் கோரத்தை உணர்ந்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் எல்லா மாவட்டங்களும் பச்சை மாவட்டங்களாக மாறமுடியும்”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story