ரேஷன் கடைகள், காய்கறி சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முதல் அமைச்சர் அறிவுறுத்தல்


ரேஷன் கடைகள், காய்கறி சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முதல் அமைச்சர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 29 April 2020 5:36 AM GMT (Updated: 29 April 2020 5:36 AM GMT)

ரேஷன் கடைகள், காய்கறி சந்தைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என முதல் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

கொரோனா பாதிப்பு எதிரொலியாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் வருகிற மே 3ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.  இந்நிலையில் 3ந்தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு அல்லது தளர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பது பற்றி கடந்த 2 நாட்களாக தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 12 சிறப்பு குழுக்களை அரசு அமைத்துள்ளது.  இந்த குழுக்களுடன் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.  இதனை தொடர்ந்து, தமிழக முதல் அமைச்சர் ஊரடங்கு தளர்வுகள் பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.  இதில் ஆட்சியர்களுக்கு அறிவுரைகளையும் அவர் வழங்கினார்.

அவர் கூறும்பொழுது, ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.  ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க செல்லும்பொழுது, சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

ரேஷன் கடையில் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு உரிய டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படுகின்றன.  டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டும்.  டோக்கன் கொடுக்கின்ற நோக்கமே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகத்தான்.  அதனால், டோக்கன் வழங்கும் போதே அதுகுறித்த வழிமுறைகளை மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.  மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்படி மக்களிடம் வலியுறுத்த வேண்டும்.

இதேபோன்று காய்கறி சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கிருமி நாசினி  அனைத்து பகுதிகளிலும் தெளிக்க வேண்டும்.  நகர பகுதிகளில் உள்ள கழிவறைகளை தினமும் 3 முறை சுத்தம் செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Next Story