கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு ஜூலை 1-ந்தேதி முதல் நடத்தலாம் - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு


கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு ஜூலை 1-ந்தேதி முதல் நடத்தலாம் - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 29 April 2020 8:30 PM GMT (Updated: 2020-04-30T01:13:47+05:30)

கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ஜூலை 1-ந்தேதி முதல் நடத்தலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருக்கிறது.

சென்னை, 

கொரோனா வைரஸ் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதையடுத்து கல்லூரிகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு எப்போது நடத்துவது?, தேர்வு முடிவுகளை எப்போது வெளியிடுவது?, அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை எப்போது தொடங்கலாம்? அடுத்த கல்வி ஆண்டுக்கான கால அட்டவணை ஆகியவற்றை குறித்து ஆராய்ந்து அதுதொடர்பான முழுமையான தகவல்களை அறிக்கையாக வெளியிட பல்கலைக்கழக மானியக்குழு, கடந்த 6-ந்தேதி ஒரு குழுவை அமைத்தது. 

இந்த குழுவுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஆர்.சி.குகத் தலைமை வகித்தார். மேலும் 11 உறுப்பினர்களும் இதில் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இந்தக்குழு அறிக்கையை பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு வழங்கியது. அதில் முன்வைக்கப்பட்ட கருத்துகளில் சிலவற்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஏற்று, செமஸ்டர் தேர்வு அட்டவணை, அடுத்த கல்வி ஆண்டுக்கான அட்டவணை ஆகியவை குறித்து சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. 

அதன் விவரம் வருமாறு:-

2019-20-ம் ஆண்டு கல்வி அமர்வாக கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதியில் இருந்து மே மாதம் 31-ந்தேதி வரை ஆன்-லைன் மூலம் வகுப்புகள் நடத்துவதற்காகவும், ஜூன் 1-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரை திட்டப்பணிகள் இறுதிப்படுத்துவது, விளக்கு மதிப்பீடு உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்காகவும் ஒதுக்க வேண்டும். கோடை விடுமுறையாக ஜூன் 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை விடவேண்டும்.

பின்னர், ஜூலை 1-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரை ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவதற்காகவும், ஜூலை 16-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை இடைநிலை செமஸ்டர் தேர்வு நடத்துவதற்காகவும் ஒதுக்கவேண்டும். ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வு முடிவு ஜூலை 31-ந்தேதி வெளியிடலாம்.

இதன் தொடர்ச்சியாக 2020-21-ம் கல்வியாண்டு அமர்வு என்பது 2, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்டு 1-ந்தேதியில் இருந்தும், புதிதாக சேரும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்தும் வகுப்புகள் தொடங்கும்.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சேர்க்கை ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெறும். கோடை விடுமுறை ஜூலை 1-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை விடப்பட்டு, அதற்கடுத்த ஆண்டுக்கான (2021-22-ம் ஆண்டு) வகுப்புகளை ஆகஸ்டு 2-ந்தேதியில் இருந்து தொடங்கலாம்.

2019-20-ம் கல்வி ஆண்டில் கொரோனா வைரஸ் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நாட்களை, 2020-21-ம் கல்வி ஆண்டில் வாரத்துக்கு 6 வேலைநாட்களாக கொண்டு செயல்பட்டு அந்த நாட்களை ஈடுசெய்து கொள்ளலாம்.

தேர்வு முறைகளை பொறுத்தவரையில், கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வின்றி உள்மதிப்பீடு அடிப்படையில் மதிப்பெண்களை வகைப்படுத்தி ‘கிரேடு’ வழங்கலாம். உள்மதிப்பீடு மதிப்பெண் 50 சதவீதமாகவும், முந்தைய பருவத்தேர்வு மதிப்பெண் 50 சதவீதமாகவும் எடுத்துக்கொள்ளலாம். கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஜூலையில் தேர்வு நடத்தலாம். இதுதவிர செய்முறை தேர்வுகள், ஆராய்ச்சி படிப்பு செயல்பாடுகளை இணையவழியில் செயலிகள் மூலம் நடத்தலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story