சென்னையில் 98 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று - மாநகராட்சி கமிஷனர் தகவல்


சென்னையில் 98 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று  - மாநகராட்சி கமிஷனர் தகவல்
x
தினத்தந்தி 1 May 2020 4:00 AM IST (Updated: 1 May 2020 1:27 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 98 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வியாபாரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு தடை ஏற்படக்கூடாது என்பதற்காக, பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், விவசாயம் மற்றும் தோட்டக்கலை துறை, கூட்டுறவுத்துறை ஆகியவை இணைந்து, அத்தியாவசியப் பொருட்களை அவர்கள் வசிக்கும் பகுதிகளிலே சென்று சேருவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 4 ஆயிரத்து 900 தள்ளுவண்டி, 1,182 சிறிய வாகனங்கள் மூலமாக ஒவ்வொரு நாளும் 800 முதல் 1000 டன் அளவுக்கு காய்கறிகள் தடையில்லாமல் கிடைப்பதற்கும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலமாகவும் பல்வேறு வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள் பொதுமக்களுக்கு கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அறிகுறி இல்லாமல் பாதிப்பு

இதுவரை 114 டன் காய்கறி தொகுப்புகளும், 425.4 டன் அளவுக்கு தனியாக காய்கறிகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் தற்போது சில்லரை கடைகள் முழுவதுமாக மூடப்பட்டுவிட்டது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அதிகளவில் தொற்று பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

சென்னையில் 98 சதவீதம் பேருக்கு எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பதை கண்காணிக்க குழுக்கள் உள்ளன. அவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story