‘கொரோனாவை ஒழிக்கும் ஆயுள் தீர்க்க மூலிகைகள் சதுரகிரி மலையில் உள்ளன’ - சென்னையில் திரிசூலத்துடன் வந்து அருள்வாக்கு கூறிய பெண்
கொரோனாவை ஒழிக்கும் ஆயுள் தீர்க்க மூலிகைகள் சதுரகிரி மலையில் இருப்பதாகவும், இந்த மாதத்துக்குள் கொரோனா தமிழகத்தை விட்டு ஓடிவிடும் என்றும் சென்னையில் திரிசூலத்துடன் வந்து பெண் ஒருவர் அருள்வாக்கு கூறினார்.
சென்னை,
கொரோனா பேரிடர் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடூர நோயில் இருந்து விடுபட்டு, சுதந்திரமான வாழ்க்கையை நாம் எப்போது வாழப்போகிறோம்? என்ற கேள்வி அனைவருடைய மனக்குகையிலும் ஓயாமல் எழுந்து கொண்டே இருக்கிறது. சமூகத்தில் எப்போது நீதியும், தர்மமும் சாய்ந்து அநீதி தலை தூக்குகிறதோ, அப்போது ஆன்மிகவாதிகளின் அருள் வாக்கு மட்டும் வெளியாக தவறுவதே இல்லை. சமூகத்தை ஒட்டு மொத்தமாக பாதிக்கும் விஷயங்களை அந்த அருள்வாக்கு பிரதிபலிக்கும் வகையில் அமைந்துவிடுகிறது.
கொரோனாவின் கொடூர பார்வையில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து கிடக்கிறார்கள். கொரோனா பீதியில் இருப்பவர்களுக்கு ஆறுதலாக, கொரோனா நோய் தமிழகத்தை விட்டு எப்போது செல்லும் என்பது குறித்து வெவ்வேறு தகவல்களை சுமந்து வரும் அருள்வாக்குகள் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ச்சியாக வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த அருள்வாக்குகள் மெய்யானால் அனைவரின் சோகத்துக்கும் மருந்து போடுவதாக அமையும்.
திரிசூலத்துடன் வந்து அருள்வாக்கு
அந்தவகையில் சேலம் மாவட்டம் அழகாபுரத்தை சேர்ந்த ஜெயந்தி தனஞ்செயன் என்பவரும் கொரோனா பற்றி அருள்வாக்கு கூறியுள்ளார். இவர் சென்னை முகப்பேர் மேற்கு அண்ணாமலை அவென்யூ பகுதியில் உள்ள தனது மகன் பிரசாத் என்பவர் வீட்டில் கடந்த சில மாதங்களாக வசித்து வருகிறார். கழுத்தில் ருத்ராட்சை மாலை, நெற்றியில் நாணயம் அளவிலான ஒரு குங்கும பொட்டு, மஞ்சள் நிற சேலை, எலுமிச்சை பழம் குத்தப்பட்ட திரிசூலம், சிறிய வேல், பட்டு உடுத்தப்பட்ட அம்மன் சிலை மற்றும் பச்சை பசேல் என வேப்பிலையை கையில் ஏந்தியவாறு அம்மன் போல தோன்றிய ஜெயந்தி, அருள்வாக்கு கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அருள்வாக்கு பலிக்குமா?
அப்போது, “என் மீது அம்மன் கடந்த 12 வருடங்களாக அமர்ந்திருக்கிறாள். கொரோனா என்பது பெரிய வியாதி. இந்த கொரோனா வைரசை மூலிகைகளால் மட்டுமே ஒழிக்கமுடியும். கொரோனாவை ஒழிப்பதற்காக மொத்தம் 3 மூலிகைகள் தேவை. இந்த 3 ஆயுள் தீர்க்க மூலிகைகளும் சதுரகிரி மலையில் தாராளமாக கிடைக்கும். இந்த மூலிகைகளை அரசு பரிசீலிக்கவேண்டும். இவ்வாறு செய்தால் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றலாம். இந்த மாத இறுதிக்குள் கொரோனா நோய் தமிழகத்தில் இருந்து ஓடிவிடும். அதற்கு பின்பு இந்த நோயால் தொந்தரவு இருக்காது” என்று கூறினார்.
ஜெயந்தி அருள்வாக்கு கூறியபடி இந்த மாதம் இறுதிக்குள் கொரோனா தமிழகத்தில் இருந்து ஒழிந்தால் சரி. இப்போதைக்கு இது மட்டுமே அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இது பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
Related Tags :
Next Story