ஊரடங்கு ஆரம்பித்தது முதல் இதுவரை அம்மா உணவகம் மூலம் தமிழகத்தில் 1.22 கோடி மக்கள் பயன் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்


ஊரடங்கு ஆரம்பித்தது முதல் இதுவரை அம்மா உணவகம் மூலம் தமிழகத்தில் 1.22 கோடி மக்கள் பயன் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
x
தினத்தந்தி 1 May 2020 2:15 AM IST (Updated: 1 May 2020 1:43 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு ஆரம்பித்தது முதல் இதுவரை அம்மா உணவகம் மூலம் தமிழகத்தில் 1.22 கோடி மக்கள் பயன் அடைந்துள்ளனர் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் கடந்த 19-ந்தேதி வரையில் 789 கட்டுப்பாட்டு அறைகள், 3 லட்சத்து 203 களப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் பணியில் உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களுக்கு மொத்தம் ரூ.31.39 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 658 அம்மா உணவகங்களிலும் நாள் ஒன்றுக்கு மொத்தம் 6.25 லட்சம் பொதுமக்கள் உணவு அருந்துகின்றனர்.

ஊரடங்கு காலம் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அம்மா உணவகங்களில் மொத்தம் 2.02 கோடி இட்லிகளும், 76.67 லட்சம் கலவை சாதங்களும், 46.91 லட்சம் சப்பாத்திகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1.22 கோடி மக்கள் அம்மா உணவகம் மூலம் பயனடைந்துள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் நாள்தோறும் 3 வேளையும் தரமான உணவு தங்கு தடையின்றி வழங்கப்பட வேண்டும்.

அம்மா உணவகங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதையும் அந்தந்த பொறுப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story