தொழில் நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்க்க சிறப்பு குழு அமைப்பு - எடப்பாடி பழனிசாமி உத்தரவு


தொழில் நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்க்க சிறப்பு குழு அமைப்பு - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 2 May 2020 4:00 AM IST (Updated: 2 May 2020 1:28 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் வெளிநாடுகளில் இருந்து இடம்பெயரும் தொழில் நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்க்க சிறப்பு குழுவை அமைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் வேளாண்மை, தொழில் உற்பத்தி உள்ளிட்ட பொருளாதாரச் செயல்பாடுகளை கொரோனா நோய் தொற்று பேரிடர் காலத்திற்குப் பின்பு மீண்டும் முன்பு போலவே துடிப்புடன் இயங்க வைப்பதில் அ.தி.மு.க. அரசு உறுதியுடன் உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் கொரோனா நோய் பரவல் ஏற்படுத்தியுள்ள பெரும் தாக்கத்தால் பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்திச் செயல்பாடுகளைப் பரவலாக்கும் பொருட்டு, குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயர முடிவு செய்துள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் அதிக முதலீடு செய்துள்ள நாடுகளான ஜப்பான், தென் கொரியா, தைவான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடமாற்றம் செய்திட முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது. இச்சூழலில், தமிழ்நாட்டில் ஏற்கனவே அதிக முதலீடுகளைச் செய்துள்ள நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி, அவர்கள் பிற நாடுகளில் இருந்து இடமாற்றம் செய்யும் தொழிற்சாலைகளை இங்கு ஈர்த்து, நம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் பணிகளை முடுக்கிவிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இவ்வாறு இடம்பெயரும் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமைச் செயலாளர் தலைமையில், “முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்புக்குழு” ஒன்றினை அமைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இக்குழுவில் ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழில் கூட்டமைப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தமிழ்நாட்டில் உள்ள ஜப்பானிய தொழில் பூங்காக்களின் பிரதிநிதிகள், தமிழ்நாடு அரசின் நிதி, பெருந்தொழில், சிறு, குறு, மற்றும் நடுத்தரத் தொழில் ஆகிய துறைகளின் செயலாளர்கள், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், வணிக வரித்துறை ஆணையர் ஆகியோர் இடம் பெறுவர்.

இடம்பெயர வாய்ப்புள்ள நிறுவனங்களைக் கண்டறிதல், அவர்களை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்கு வழங்க வேண்டிய விரைவான ஒற்றைச்சாளர அனுமதிக்கான வழிமுறைகள், சிறப்பு சலுகைகள் மற்றும் அவர்களை ஈர்க்க வாய்ப்புள்ள தொழிற் பூங்காக்கள் மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை கண்டறிந்து விரைந்து செயல்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்ட பணிகளை இந்த சிறப்புக்குழு மேற்கொள்ளும். இந்த சிறப்புக்குழு தனது முதற்கட்ட அறிக்கையை ஒரு மாதத்துக்குள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கும்.

தமிழ்நாட்டை சீரிய முன்னேற்றப் பாதையில் தளர்வின்றி தொடர்ந்து கொண்டு செல்ல அ.தி.மு.க. அரசு முனைப்புடன் உள்ளது. தொழில் வளர்ச்சியிலும், தொடர்ந்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் தமிழ்நாட்டை ஒரு முன்னணி மாநிலமாக தொடர்ந்து நிலைநிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கிணங்க அதை உடனடியாக நிறைவேற்றும் வகையில், தொழில்துறையால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Next Story