கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை விடுதியில் மருத்துவ மாணவி மர்ம சாவு


கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை விடுதியில் மருத்துவ மாணவி மர்ம சாவு
x
தினத்தந்தி 2 May 2020 4:15 AM IST (Updated: 2 May 2020 1:59 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை விடுதியில் இறுதி ஆண்டு மருத்துவ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

சென்னை, 

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் பிரதீபா (வயது 22). இவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து தனது பெற்றோருடன் சென்னை பெரம்பூரில் வீடு எடுத்து தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று படித்து வந்தார். கொரோனா பாதிப்பு இருந்து வருவதால் பிரதீபாவின் பெற்றோர் சொந்த ஊரான வேலூரில் தங்கி இருந்தனர்.

மேலும் கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதால், டாக்டர்கள், செவிலியர்கள் மாணவர்கள் என அனைவரும் மருத்துவ கல்லூரி விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பிரதீபாவும் இளங்கலை மாணவிகள் விடுதியில் தங்கி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பணிக்கு சென்றார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பிரதீபா அவரது பெற்றோரிடம் செல்போன் மூலம் பேசிவிட்டு இரவு தூங்க சென்றுள்ளார்.

நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவரது அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக மாணவிகள் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டும், விடுதி அறையின் கதவை தட்டியும் பார்த்துள்ளனர்.

ஆனால் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர்கள் விடுதி காவலர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது பிரதீபா படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ‘டீன்’ வசந்தாமணிக்கும், கீழ்ப்பாக்கம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

மேலும் மாணவிகள் பிரதீபாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரதீபா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து பிரதீபாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அவருக்கு கொரோனா பாதிப்பு குறித்த பரிசோதனையும் செய்யப்பட்டது.

அதில் பிரதீபாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பிரதீபா கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிநாடு சென்று வந்துள்ளார். இதையடுத்து அவர் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பு முடிந்தவுடன் கடந்த வாரம் முதல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் பிரசவ ‘வார்டில்’ பணியாற்றி உள்ளார். மேலும் வீட்டுக்கு செல்லாமல் தொடர்ந்து பணியில் இருந்து உள்ளதால் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் அவர் நேற்று மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது உடம்பில் காயங்களோ அல்லது தற்கொலை செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவு வந்தால் தான் மரணத்துக்கான காரணம் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story