சென்னை கோயம்பேடு சந்தை மூலம் 88 பேருக்கு கொரோனா தொற்று


FILE PHOTO
x
FILE PHOTO
தினத்தந்தி 2 May 2020 3:01 PM IST (Updated: 2 May 2020 3:01 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மாநில மக்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு  தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.  சென்னையில் நேற்று மட்டும் 176 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் சென்னையில் மட்டும் 1082 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தைக்குப் பலர் வந்து போவதால் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு கொரோனா பரவிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.  இதனால், கொரோனா பரவலின் மையப்புள்ளியாக கோயம்பேடு உருவாகியுள்ளதா என்ற அச்சம் தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

தற்போது கோயம்பேட்டிலிருந்து மாவட்டங்களுக்கு வந்தவர்களை கண்டறியும் முயற்சியில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. கோயம்பேட்டிலிருந்து வந்தவர்கள் தங்கியிருந்த இடங்களில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு, அவர்களோடு தொடர்புடையவர்களை கண்டறியும் பணியும் தொடங்கியுள்ளது. மேலும் கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர்கள் தாங்களாகவே முன்வந்து தகவல் அளிக்க வேண்டுமென பல மாவட்ட நிர்வாகங்கள் வேண்டுகோளும் விடுத்துள்ளன.

இந்தநிலையில், கோயம்பேடு சந்தையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக 88 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னையில் 50 பேர், அரியலூரில் 19 பேர், கடலூரில் 9 பேர், காஞ்சிபுரம் பெருநகர் பகுதியை சேர்ந்த 7 பேர், விழுப்புரத்தில் 2 பேர், பெரம்பலூரில் ஒருவர் என 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story