கட்டுமான பொருட்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளை அனுமதிக்க வேண்டும் - தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை


கட்டுமான பொருட்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளை அனுமதிக்க வேண்டும் - தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 4 May 2020 1:45 AM IST (Updated: 4 May 2020 12:42 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பொருட்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளை அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் முனிரத்தினம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக கட்டுமான தொழில்கள் முடங்கி உள்ளது. சுமார் 50 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். கட்டுமான தொழிலுக்கு உறுதுணையாக இரும்பு, மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் ஏற்றிச் செல்லும் 1லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் இயங்காததால் அதன் உரிமையாளர்கள், டிரைவர்கள் என சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் சென்னையில் நடக்கும் மெட்ரோ ரெயில், வீட்டு வசதி வாரியம், மாநகராட்சி மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் என எந்த கட்டுமான பணிகளும் நடைபெறவில்லை.

எனவே தமிழக அரசு ஒவ்வொரு கனரக டிரைவர்களுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். லாரிகளுக்கு விதிக்கும் சாலை வரியை 31.3.2021 வரை தள்ளுபடி செய்ய வேண்டும். வாகன பதிவு சான்றிதழ் போன்றவற்றையும் அந்த தேதி வரை தளர்வு செய்ய வேண்டும். அரியானா மாநிலத்தை போல் தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் சுங்கவரி வசூல் செய்வதை 6 மாத காலத்துக்கு தமிழக அரசு தடை செய்ய வேண்டும். 

பழுதடைந்த லாரிகளை சரி செய்ய ஏதுவாக வாகனங்கள் பழுது பார்க்கும் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கட்டுமான தொழில்கள் நடைபெறும் இடங்களுக்கு தேவையான கட்டுமான பொருட்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் இயங்க அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story