தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது - உயிரிழப்பும் 30 ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. மேலும் தமிழகத்தில் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை,
கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் முதன்மை கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று சென்னையில் 37 பேர் உள்பட தமிழகத்தில் 39 பேர் முதன்மை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு குறித்து நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 266 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 187 ஆண்கள், 79 பெண்கள் ஆவர். இதுவரை தமிழகத்தில் 2 ஆயிரத்து 15 ஆண்கள், 1,007 பெண்கள், ஒரு 3-ம் பாலினத்தவர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து 1,379 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 38 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று பாதித்த 266 பேரில், சென்னையில் 3 வயது குழந்தை உள்ளிட்ட 7 குழந்தைகள் மற்றும் 196 பேரும், விழுப்புரத்தில் 3 வயது பெண் குழந்தை உள்பட 2 குழந்தைகள் மற்றும் 31 பேரும், கடலூரில் 11 வயது பெண் குழந்தை உள்பட 9 பேரும், கள்ளக்குறிச்சியில் 6 பேரும், கோவையில் 10 வயது ஆண் குழந்தை உள்பட 4 பேரும், மதுரை, தென்காசி, திருவள்ளூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 12 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாகவும்(ஹாட்ஸ்பாட்), 24 மாவட்டங்கள் மிதமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகவும், ஒரு மாவட்டம் பச்சை மாவட்டமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட 11 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் இருந்து சென்னை வந்த 44 வயது ஆண் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story