மதிப்பு கூட்டு வரி அதிகரிப்பு: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு - நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி நேற்று உயர்த்தப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது.
சென்னை,
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாதது ஏன்? என்று சமீப நாட்களாக நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. பொதுமக்களும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் அரசுக்கு என்ன நஷ்டம் வரும்? என்று ஆதங்கத்தில் அவ்வப்போது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, பெட்ரோல், டீசல் விலையில் கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமலேயே தொடர்ந்து இருந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டுவரியில் சில மாற்றங்களை நேற்று கொண்டு வந்து இருக்கிறது. இதுதொடர்பாக வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) என்.முருகானந்தம் நேற்று அரசாணையையும் வெளியிட்டார்.
அந்த அரசாணையில், ‘ஏற்கனவே பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டுவரி 34 சதவீதமாக உள்ளது. இதனை 15 சதவீதம் எனவும், லிட்டருக்கு 13 ரூபாய் 2 காசு நிரந்தர வரியாகவும் பிரிக்கப்படுகிறது. டீசல் மீதான மதிப்பு கூட்டுவரி 25 சதவீதமாக இருந்தது. அது தற்போது 11 சதவீதம் எனவும், லிட்டருக்கு 9 ரூபாய் 62 காசு நிரந்தர வரியாகவும் பிரித்து உத்தரவிடப்படுகிறது. இந்த திருத்தம் 3-ந்தேதி (நேற்று) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
மதிப்பு கூட்டுவரி மாற்றி அமைக்கப்பட்டதனால் பெட்ரோல், டீசல் விலை உயருகிறது. ஏற்கனவே தமிழக அரசின் வருவாய் பெட்ரோல், டீசல் மற்றும் டாஸ்மாக் ஆகியவற்றின் மீதான மதிப்பு கூட்டுவரி மூலம் தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் அரசின் வருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுகட்டவே பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மாற்றி அமைத்ததாக பேசப்படுகிறது.
எவ்வளவு உயர்வு?
மதிப்பு கூட்டுவரி மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதால், ஏற்கனவே அந்தந்த பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 99 காசும், டீசலுக்கு 2 ரூபாய் 32 காசும் உயர்வு இருக்கும். இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சென்னையை பொறுத்தவரையில், நேற்று நள்ளிரவுக்கு முன்பு வரை ஒரு லிட்டர் பெட்ரோல் 72 ரூபாய் 28 காசுக்கும், ஒரு லிட்டர் டீசல் 65 ரூபாய் 71 காசுக்கும் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.
நிரந்தர வருமானம்
மதிப்பு கூட்டுவரி மாற்றி அமைக்கப்பட்டு இருப்பது குறித்து தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி கூறியதாவது:-
தமிழகத்தில் நிரந்தரமாக பெட்ரோலுக்கு 34 சதவீதமும், டீசலுக்கு 25 சதவீதமும் மதிப்பு கூட்டு வரியாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது பெட்ரோலுக்கு 15 சதவீதமாகவும், டீசலுக்கு 11 சதவீதமாகவும் குறைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பெட்ரோலுக்கு புதிய நிரந்தர வரியாக 13 ரூபாய் 2 காசும், டீசலுக்கு புதிய நிரந்தர வரியாக 9 ரூபாய் 62 காசும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயரும்போதும், குறையும்போதும் இனி இந்த அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படும்.
கச்சா எண்ணெய் விலை குறையும்போது, வரி இழப்பு அரசாங்கத்துக்கு ஏற்படாது. இந்த விகிதாசாரம் மூலம் அரசுக்கு நிரந்தர வரி கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மத்திய அரசுக்கு சம்பந்தம் இல்லை
இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் சுத்திகரிக்கப்படும் ஆலைகளில் முதலில் ஒரு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதற்கு பிறகு, விற்பனையில் மத்திய அரசுக்கான வரி அடுத்து மாநில அரசுக்கான வரிகளை சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது. ஆக பெட்ரோல், டீசல் விலைகளை பொருத்த வரையில் 3 வகைகளாக பிரிக்கப்படுகிறது. இத்துடன் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் முகவர்களுக்கான கமிஷன் தொகையும் கணக்கிடப்படுகிறது.
இந்தநிலையில் தற்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காரணம் மத்திய அரசை பொருத்தவரையில் விற்பனையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மட்டும் வரியாக செலுத்தப்படுகிறது. ஆனால் மாநில அரசை பொருத்தவரையில் பெட்ரோலுக்கு 34 சதவீதமும், டீசலுக்கு 25 சதவீதமும் வரி செலுத்தப்படுகிறது. இந்த முறையை தற்போது மாநில அரசு மாற்றி உள்ளது.
குறிப்பாக ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்வதாக இருந்தால் 15 சதவீதம் வரியும், ரூ.13.02 சர்சார்ஜ்-ம் வழங்க வேண்டும். அதேபோல், டீசலுக்கு 11 சதவீதம் வரியும், ரூ.9.62- சர்சார்ஜ்-ம் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பெட்ரோல் சுமார் ரூ.3.20-ம், டீசல் சுமார் ரூ.2.50-ம் உயர்ந்து உள்ளது. மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் இந்த விலை ஏற்றத்தால் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story