சென்னையில் அம்மா உணவக பெண் பணியாளருக்கு கொரோனா உறுதி
சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள அம்மா உணவக பெண் பணியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. தமிழகத்தில் 3,023 பேர் பாதிப்படைந்து உள்ளனர். 1,379 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். 30 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் அதிக அளவு பாதிப்பு உள்ளது. உணவு விடுதிகள், ஓட்டல்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில், அம்மா உணவகத்தில் பலர் சாப்பிட்டு வந்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் கஜபதி தெருவில் அம்மா உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் அதிக அளவில் மக்கள் வந்து உணவு சாப்பிட்டு சென்றனர். இந்த நிலையில், அம்மா உணவகத்தில் பணியாற்றிய 54 வயதுடைய பெண் பணியாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் உடனடியாக அவர் அனுமதிக்கப்பட்டார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இவரது வீடு இருப்பதால் நோய்த்தொற்று பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.
அவருடன் தொடர்புடைய பலரையும் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதி அம்மா உணவகம் மூடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் ஏழை, எளியோர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story