பெட்ரோல் - டீசல் விலை உயர்வு: மக்களுக்கு அரசு செய்யும் துரோகம் - கமல்ஹாசன்


பெட்ரோல் - டீசல் விலை உயர்வு: மக்களுக்கு அரசு செய்யும் துரோகம் - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 4 May 2020 5:20 PM IST (Updated: 4 May 2020 5:20 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், அரசின் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மக்களுக்கு அரசு செய்யும் துரோகம் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை,

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாதது ஏன்? என்று சமீப நாட்களாக நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. பொதுமக்களும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் அரசுக்கு என்ன நஷ்டம் வரும்? என்று ஆதங்கத்தில் அவ்வப்போது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, பெட்ரோல், டீசல் விலையில் கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமலேயே தொடர்ந்து இருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டுவரியில் சில மாற்றங்களை நேற்று கொண்டு வந்து இருக்கிறது. இதுதொடர்பாக வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) என்.முருகானந்தம் நேற்று அரசாணையையும் வெளியிட்டார்.

அந்த அரசாணையில், ‘ஏற்கனவே பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டுவரி 34 சதவீதமாக உள்ளது. இதனை 15 சதவீதம் எனவும், லிட்டருக்கு 13 ரூபாய் 2 காசு நிரந்தர வரியாகவும் பிரிக்கப்படுகிறது. டீசல் மீதான மதிப்பு கூட்டுவரி 25 சதவீதமாக இருந்தது. அது தற்போது 11 சதவீதம் எனவும், லிட்டருக்கு 9 ரூபாய் 62 காசு நிரந்தர வரியாகவும் பிரித்து உத்தரவிடப்படுகிறது. இந்த திருத்தம் 3-ந்தேதி நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

உலகமெங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்பு கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும், 40 நாட்களாக மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், இதை செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம் என பதிவிட்டுள்ளார்.

Next Story