“நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் எந்த நடைமுறையும் மீறப்படவில்லை” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்


“நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் எந்த நடைமுறையும் மீறப்படவில்லை” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்
x
தினத்தந்தி 5 May 2020 2:00 AM IST (Updated: 5 May 2020 1:51 AM IST)
t-max-icont-min-icon

“நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் எவ்வித நடைமுறையும் மீறப்படவில்லை” என்று மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

சென்னை, 

மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

“2019-ம் ஆண்டு சட்டசபையில் நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கையின்போது புதிய அறிவிப்பில் தஞ்சாவூரில் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு திட்டம் செயல்படுத்த அறிவிக்கப்பட்டது. கடந்த 19-2-2020 அன்று நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டு 25-2-2020 அன்று ஒப்பந்த புள்ளியும் மின்னணு முறையில் கோரப்பட்டு, இன்னும் ஒப்பந்தப்புள்ளி பெறும் நிலையில் உள்ளது.

ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதில் எவ்வித நடைமுறையும் மீறப்படவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க, தங்கள் ஆட்சி காலத்தில் வேண்டியவர்களுக்கு டெண்டர் பார்ம் கொடுக்கப்பட்டு, பாக்ஸ் டெண்டர் முறையை மேற்கொண்ட தி.மு.க. கட்சியின் இன்றைய தலைவர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ஊழல் என்று அறிக்கை விடுவது வேடிக்கையாக இருக்கிறது.

உண்மைக்கு புறம்பான தகவல்

இந்த ஒப்பந்தப்புள்ளி தொடர்பாக தி.மு.க. கட்சியை சேர்ந்த ஒப்பந்ததாரர் துரை ஜெயக்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்ததை, முகாந்திரம் ஏதும் இல்லை என கருத்து தெரிவித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், மனுதாரரின் வக்கீலே இம்மனுவை ரிட் மனுவாக மாற்ற அனுமதி கோரியதை ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இதனை திரித்து, ஒப்பந்தம் கோரப்பட்டதில் ஏதோ முறைகேடு நடந்ததாக ஐகோர்ட்டு சுட்டிக்காட்டியதாக உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நீதிமன்றத்தில் வழக்கு ஆரம்ப நிலையில் தான் உள்ளது. ஆனால், மு.க.ஸ்டாலின் “வழக்கை இழுத்தடிக்க அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்யலாம்” என ஆரூடம் தெரிவித்திருப்பது, இந்த அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தையே காட்டுகிறது.

வாய்ப்பே இல்லை

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளை மேம்படுத்தி பராமரிக்க சிறந்த முறையில் தொழில்நுட்ப வல்லுநர்களின் மதிப்பீட்டின்படி உரிய நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், செவி வழியாக கேட்ட தகவலைக் கொண்டு, இந்த ஒப்பந்தப்புள்ளியில் ரூ.700 கோடி அதிகம் என கருத்து தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மேலும், மின்னணு முறையில் டெண்டர் நடைபெறுவதால் தகுதியுள்ள ஒப்பந்ததாரர்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் டெண்டர் வழங்க முடியாது. எனவே, இதில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.

கொரோனா நோய் தடுப்பு பணியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்று பல்வேறு மருத்துவ அமைப்புகள் பாராட்டியுள்ளது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தினந்தோறும் உண்மைக்கு மாறான அறிக்கைகளை விடுகிறார் என்றே தோன்றுகிறது.

மறந்துவிடக்கூடாது என்பதற்காக

ஊரடங்கு நேரத்தில் தன்னை மக்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவே, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக, இந்த அரசை குறைகூறி அரைகுறை அறிக்கையை வெளியிட்டு வருகிறார்.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சி தான் என்பதை இந்திய திருநாடே அறியும். எனவே, அக்கட்சித் தலைவர், ஊழல் தொடர்பான அறிக்கை வெளியிடுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பானதாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story