குறு, சிறு, நடுத்தர நிறுவன தொழிலாளர்களுக்கு தொய்வின்றி வேலை வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
ஊரடங்கு என்ற மூச்சு திணறலில் இருந்து மீண்டு வர குறு, சிறு, நடுத்தர நிறுவன தொழிலாளர்களுக்கு தொய்வின்றி வேலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய கேந்திரங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. திருப்பூர், கோவை, சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இயங்கும் இந்த நிறுவனங்கள் முற்றிலும் நிலை குலைந்து நிற்கின்றன.
இந்த நிலையில், 4-ந்தேதி (நேற்று) மாநிலம் முழுவதும் உள்ள இந்த தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த கூட்டமைப்புத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடி, அவர்கள் சந்திக்கும் இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கான வாய்ப்புக் கூறுகள் குறித்தும், பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கான ஆலோசனைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தேன்.
ரொக்க கடன் அளவை உயர்த்த வேண்டும்
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ‘ஊரடங்கு’ என்ற மூச்சுத் திணறலில் இருந்து மீண்டு, தொழில் களை தொடங்கிட பின்வரும் கோரிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் உடனடியாகப் பரிசீலனை செய்து நிறைவேற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
* தொழிலை மீண்டும் தொடங்கவும், தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்கவும் இந்த நிறுவனங்களின் நடைமுறை மூலதனம் மற்றும் ரொக்க கடன் வழங்கும் வரம்பை 25 சதவீதம் உயர்த்தி, குறைந்த வட்டியில் வழங்க வேண்டும்.
* கேரளாவில் வழங்கியது போல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 முதல் 2 சதவீதம் இந்நிறுவனங்களுக்கு நிவாரண உதவிகளாக அறிவிக்க வேண்டும்.
* கடன் தவணை செலுத்துவதை 6 மாதத்திற்கு தள்ளிவைக்கவும், செயல்படா சொத்து அளவுகோலை தளர்த்திடவும் வேண்டும்.
வட்டி வசூலை தள்ளிவைக்க வேண்டும்
* மின்கட்டணம், தண்ணீர் கட்டணம் மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் செலுத்துவதை 6 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும்.
* 6 மாதங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூலை தள்ளிவைப்பதோடு, அந்த பாக்கியை இரு வருடங்களில் மாத தவணையில் செலுத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும்.
* ரூ.10 லட்சம் வரை உள்ள பருவம்சார் கடன்களுக்கு வட்டி கட்டும் கால அவகாசத்தை நீட்டித்து கொடுக்க வேண்டும்.
* ஊரடங்கிற்கு பிறகு இந்த நிறுவனங்கள், தங்கள் தொழிலைத் தொடங்குவதற்கு 30 சதவீத மானிய கடன்கள் வழங்கிட வேண்டும். அதற்கு வட்டி வசூல் செய்வதை 6 மாதம் தள்ளிவைக்க வேண்டும்.
லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலன் கருதியும், ஊரடங்கு தளர்வுகளினால் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொய்வின்றி செயல்பட்டிடவும் எவ்வித தயக்கமும், தாமதமுமின்றி இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி, தமிழகத்தின் தொழில் முன்னேற்றத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் தற்போதுள்ள தேக்க நிலைமையில் இருந்து உடனடியாக மீட்டிட வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய-மாநில அரசுகளுக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மராட்டிய தமிழர்கள்
மராட்டியத்தில் தவிக்கும் தமிழக தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்ப தங்களின் அரசு தயாராக இருக்கிறது என்று மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மத்திய ரெயில்வே துறை மந்திரி பியூஷ்கோயலிடம் நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவர் டி.ஆர்.பாலு விவரத்தை தெரிவித்துள்ளார். மத்திய அரசும் ‘சிறப்பு’ ரெயில் மூலம் மராட்டியத்தில் இருந்து தமிழகத்திற்கு தொழிலாளர்களை அனுப்ப தயாராக உள்ளது.
தமிழக அரசு தரப்பிலிருந்து உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக வந்து சேர்வார்கள். இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ராவுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.
தமிழக அரசு காலம் தாழ்த்தாது மத்திய அரசிடமும், மராட்டிய மாநில அரசிடமும் தொடர்புகொண்டு இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக தொழிலாளர்களின் பயணச் செலவிற்கான பொறுப்பினையும், அவர்களுக்கான பரிசோதனைகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து விரைந்து மீட்டு, அழைத்து வருமாறு ஆட்சியாளர்களை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story