மதுக்கடைகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் - அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
மதுக்கடைகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை,
மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சி தலைவர்கள் விடுத்துள்ள கருத்துகள் வருமாறு:-
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி:-
டாஸ்மாக் கடைகள் மூலம் வருகிற ரூ.36 ஆயிரம் கோடி வருமானத்திற்காக லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கும் மதுக்கடைகளை, மீண்டும் திறக்கும் முடிவை கைவிட்டு முழுமையான மதுவிலக்கை அமுல்படுத்தி தமிழ் சமுதாயத்தின் மனிதவளத்தை காப்பாற்ற வேண்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை தலைவருமான குமரி அனந்தன்:-
என் ஆட்சியே போகவேண்டிவந்தாலும் நான் மதுக்கடைகளை திறக்கமாட்டேன் என்று கூறிய அண்ணாவின் பெயரால் கட்சி வைத்து ஆட்சி நடத்துபவர்கள், கொரோனா கொடுமையால் மூடியிருக்கும் மதுக்கடைகளை திறக்கமாட்டோம் என்று கூறி தமிழர்களை மீண்டும் தலைநிமிர செய்யவேண்டும்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்:-
கொரோனா நோய் பெருந்தொற்று பரவல் தீவிரமாகி வரும் சூழலில் மதுக்கடைகளை திறக்கும் தமிழ்நாடு அரசின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக மதுக்கடைகள் திறக்கும் உத்தரவை ரத்துசெய்து, பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கைகளை தொடங்கவேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-
சென்னை தவிர, இதர மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பது என அரசு மேற்கொண்டுள்ள முடிவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் பசி பட்டினியோடு மிகுந்த நெருக்கடியில் வேலையும், வருமானமும் இல்லாமல் வாழும் நிலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது சாதாரண மக்களின் குடும்பங்களை கற்பனை செய்ய முடியாத நெருக்கடியில் தள்ளிவிடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:-
டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் மக்களும் கட்டுகோப்பாக இருக்கிறார்கள். இதனை பொன்னான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடினால் மக்களுக்கும், நாட்டிற்கும் நல்லது ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-
மதுக்கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பது, வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயல். ஏழை-எளிய மக்களின் அடிவயிற்றில் அடிப்பதாகும். எனவே, அந்த முடிவை கைவிட வேண்டும்.
பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன்:-
நோய்த்தடுப்பு சக்தி அதிகரிக்க வேண்டிய இந்தநிலையில், உடலையும் உள்ளத்தையும் பலவீனமாக்கும் ஒரு போதைக்கு மக்களை தள்ளுவது வேடிக்கையான வேதனை. எனவே தமிழக அரசு, மீண்டும் மதுக்கடைகளை திறக்கும் அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-
மதுக்கடைகளை திறப்பதால் உடல்நலன் கெடும் என்பது மட்டுமல்லாமல் சட்டம்-ஒழுங்கும் பாதிக்கப்படும். மேலும் மது குடிக்காமல் இருந்துவிடலாம் என எண்ணியவர்களுக்கு மீண்டும் மதுகுடிக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்பதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே மதுக்கடைகளை திறக்க அறிவித்ததை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்:-
கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப்படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு.
இதேபோல் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி., தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தலைவர் மணி அரசன், கலப்பை மக்கள் இயக்கத்தின் இயக்குனர் பி.டி.செல்வகுமார், எஸ்.யு.சி.ஐ.(கம்யூனிஸ்ட்) கட்சியின் அலுவலக செயலாளர் வி.பி.நந்தகுமார் ஆகியோரும் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை கூறி இருக்கின்றனர்.
Related Tags :
Next Story