எல்லாம் சரியாகி வருவது போன்ற தோற்றத்தை உருவாக்க அரசு நினைக்கிறது - மு.க.ஸ்டாலின் அறிக்கை
எல்லாம் சரியாகி வருவது போல் தோற்றத்தை உருவாக்க அரசு நினைக்கிறது என்றும், ஊரடங்கு தளர்வுகள் கொரோனா தாக்குதல் எண்ணிக்கையை அதிகரிக்க காரணமாகி விடக்கூடாது என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அச்சம் தருவதாகவும், அதிர்ச்சியை ஊட்டுவதாகவும் பீதியை ஏற்படுத்துவதாகவும் மாறிக்கொண்டு இருக்கிறது. பத்து, இருபதாக அதிகரித்த எண்ணிக்கை முந்நூறு, நானூறாக அதிகரித்து வருவது எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்று கணிக்க முடியாததாக இருக்கிறது.
ஊரடங்கு, முழு ஊரடங்கு என அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது போலக் காட்டினாலும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகப்படியான பரிசோதனைகள் செய்யப்படுவதால் இவை வெளியில் தெரிய வருகிறதா அல்லது நோய்ப் பரவல் தடுக்கப்படவில்லையா என்பது புதிராகவே உள்ளது.
நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். போர்க்காலத்தைவிட இது பேரச்சம் தருகின்ற பேரழிவுக் காலமாக இருக்கிறது.
இன்றைக்கு கோயம்பேடு மீது முழுப்பழியையும் போடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 25-ந்தேதி அன்று பல்லாயிரக்கணக்கில் கூடியதும், தினமும் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மொத்த மற்றும் சிறுவியாபாரிகளை தனிமனித இடைவெளி இல்லாமல் கூட விட்டதும்தான் அரசாங்கம் செயல்படும் அழகா? சென்னை மாநகரத்தில் காவல்துறை ஆணையரகம் இருக்கிறதா? அல்லது அதுவும் மூடி சீல் வைக்கப்பட்டு விட்டதா?.
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏப்ரல் 19-ந்தேதியில் இருந்தே அதிகமாகி வந்தது. அப்போதே சிறப்பு அதிகாரியை நியமித்திருக்க வேண்டும். கொரோனா கட்டுக்கடங்காமல் ஆனபிறகு சிறப்பு அதிகாரி போடுவதால் என்ன பயன்?.
அதோடு, 7-ந்தேதியில் (நாளை) இருந்து டாஸ்மாக் கடைகளைத் திறக்கப் போவதாக அறிவித்துள்ளது அரசு. அப்படியானால் ஊடரங்குக்கு உண்மையான பொருள் என்ன என்பதையும் அரசுதான் விளக்க வேண்டும். அரசுக்கு சில ஆலோசனைகளைச் சொன்னால் கோபம் வருகிறது. ஆனால் இதுபோன்ற சிறு விஷயங்களில் கூட அக்கறையும் சிந்தனைத் திறனும் இல்லாததாக தமிழக அரசு இருப்பதை நினைத்து வேதனையாக இருக்கிறது.
மக்கள் கூடுவதை தவிர்க்கலாம்
பொதுமக்கள், தாங்கள் இருக்கும் இடத்திலேயே தேவைகள் பூர்த்தியானால் எதற்காக வெளியே வரப்போகிறார்கள்?. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு அரசு இதுவரை சிந்திக்கவில்லை. அதனால்தான் வெளியில் வருகிறார்கள் மக்கள். கொரோனா பரிசோதனைகள்கூட, அவர்கள் வாழும் இடங்களுக்கு அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் செய்யப்படுவதில்லை. அதற்கும் அவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் வரவேண்டி உள்ளது. மொத்தமாக மக்கள் கூடுவதற்கான தேவையை அரசே ஏற்படுத்துகிறது. இதுபோன்ற செயல்களைத் தவிர்த்தாலே மக்கள் கூடுவதைத் தவிர்க்கலாம். கொரோனா பரவாமலும் தடுக்கலாம்.
சென்னையில் ராயபுரம், திரு.வி.க. நகர், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் மக்கள் மிகமிக நெருக்கமாக வசித்து வருகிறார்கள். அதேபோல் கூவம் கரையோர மக்கள், குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் என இவர்களைச் சிறப்புக் கவனம் செலுத்திப் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு மாற்று இடம் அளிப்பதும் அவர்களை நோயில் இருந்து காப்பாற்றும் நடவடிக்கையாக இருக்கும். ‘வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள்’ என்று அவர்களுக்கு அறிவுரை சொல்ல முடியாது. ஒரே வீட்டுக்குள் மொத்தமாக, ஒரே தெருவுக்குள் ஏராளமாக அடைந்து வாழ்பவர்களுக்கு தற்காலிக மாற்று இடங்கள் தரப்பட்டு தங்கவைக்கப்பட வேண்டும்.
இத்தகைய சூழலில் ஊரடங்கில் தளர்வுகள் செய்து, ‘எல்லாம் சரியாகி வருகிறது’ என்ற தோற்றத்தை உருவாக்க தமிழக அரசு நினைக்கிறது. கொரோனா கட்டுக்குள் வரவில்லை என்பதையே நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை காட்டுகிறது. அரசின் தளர்வு, இந்த எண்ணிக்கையை அதிகரிக்கக் காரணமாகி விடக்கூடாது.
மக்களைக் காக்க வேண்டிய தமிழக அரசு, அரசியல் உள்நோக்கமற்று, தீர ஆலோசித்து, பலதரப்பட்டவர்களின் ஆலோசனைகளைப் பெற்று, விரைந்து சிந்தித்து ஆக்கபூர்வமான முடிவுகளை எடுத்துச் செயல்படுத்த வேண்டும். மக்களின் உயிர் மகத்தானது. அதனை அரசியலால், அறியாமையால், ஆணவத்தால் இழந்துவிடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
“நீட்” தேர்வை ஒத்திவைக்க வேண்டும்
மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா என்ற கொடூரத் தொற்றின் கோரத் தாண்டவத்தால், ஒட்டுமொத்தத் தேசமே அச்சத்திலும், பீதியிலும் முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்திலும், ஜூலை 26-ந் தேதி “நீட்” தேர்வு நடைபெறும் என்று அறிவித்திருப்பது, மாணவ, மாணவியரை பற்றியோ, அவர்தம் பெற்றோர்களை பற்றியோ, மத்திய அரசுக்குத் துளியும் அக்கறையோ, கவலையோ இல்லை என்றே தெரிகிறது.
நாடு இப்போது இருக்கும் பதற்றமான சூழலில் என்ன மனநிலையுடன் மாணவர்களால் இந்தத் தேர்வுக்குத் தயார்படுத்திக்கொண்டு எழுத முடியும்?. மேலும், இந்த “நீட்” தேர்வு எத்தகைய பாதிப்புகளை இந்நாட்டில் ஏற்படுத்தி வருகிறது என்பதைத் தொடர்ச்சியாகச் சொல்லி வருகிறேன்.
இத்தேர்வு நியாயமாக நேர்மையாக நடைபெறவில்லை என்பதற்கு உதாரணமாக ஆள்மாறாட்ட வழக்குகள் பதிவாகி, பல மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் சிறையில் அடைக்கப்பட்ட காட்சியையும் பார்த்தோம். இப்படி முறையற்ற ஒரு தேர்வை, இந்தக் கொரோனா காலத்திலும் நடத்தாமல் மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story