என்ஜினீயரிங் படிப்புக்கு ஆகஸ்டு மாதத்துக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் - ஏ.ஐ.சி.டி.இ. அறிவிப்பு
என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வை ஆகஸ்டு மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏ.ஐ.சி.டி.இ.) தெரிவித்து இருக்கிறது.
சென்னை,
கொரோனாவால் தற்போது நிலவும் ஊரடங்கால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் அடுத்த கல்வியாண்டுக்கான அட்டவணை, இறுதி செமஸ்டர் தேர்வு எப்போது நடத்துவது? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சமீபத்தில் பல்கலைக்கழக மானியக்குழு சில முடிவுகளை எடுத்து வெளியிட்டது.
அதன் தொடர்ச்சியாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏ.ஐ.சி.டி.இ.) நிர்வாகக்குழுவின் 133-வது கூட்டம் கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ந்தேதி நடைபெற்றது. அதில் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் கல்வியாண்டு அட்டவணை, அங்கீகாரம் புதுப்பிப்பது உள்பட பல்வேறு முடிவுகள் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் உறுப்பினர் செயலர் ராஜீவ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான அனுமதியை ஏற்கனவே இருந்த அட்டவணைப்படி, ஏப்ரல் 30-ந்தேதிக்குள் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஜூன் 15-ந்தேதிக்குள் இந்த அனுமதியை பெற்றுக்கொள்ளலாம். பல்கலைக்கழகத்தால் இணைப்பு அந்தஸ்து பெறுவதற்கு மே மாதம் 15-ந்தேதி ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஜூன் 30-ந்தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். முதல் முறையாக ஆன்லைனிலேயே ஒப்புதல் வழங்க இருக்கிறது.
அதேபோல், 2020-21 கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்புகளில் ஜூன் 30-ந்தேதிக்குள் முதல்கட்ட கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே இருந்த அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது உள்ள நிலைமையை கருத்தில் கொண்டு, ஆகஸ்டு மாதம் 15-ந்தேதிக்குள்ளோ அதற்கு முன்னரோ முதல்கட்ட கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும்.
2-ம் கட்ட கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை ஆகஸ்டு மாதம் 25-ந்தேதிக்குள்ளோ அல்லது அதற்கு முன்னரோ நடத்தி முடிக்கவேண்டும். அதேபோல், காலி இடங்கள் இருக்கும் பட்சத்தில் அந்த இடங்களை ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் மாணவர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.
என்ஜினீயரிங் படிப்புக்கான கல்வி ஆண்டு தொடக்கம் செப்டம்பர் 1-ந்தேதியும், இதர தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு(பாலிடெக்னிக் உள்பட கல்வி நிறுவனங்கள்) ஆகஸ்டு 1-ந்தேதியும் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story