கிருஷ்ணகிரியிலும் கால் பதித்தது: தமிழகத்தில் 2 நாளில் 1,035 பேருக்கு கொரோனா - சாவு எண்ணிக்கை 33 ஆக உயர்வு


கிருஷ்ணகிரியிலும் கால் பதித்தது: தமிழகத்தில் 2 நாளில் 1,035 பேருக்கு கொரோனா - சாவு எண்ணிக்கை 33 ஆக உயர்வு
x
தினத்தந்தி 6 May 2020 4:45 AM IST (Updated: 6 May 2020 3:00 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சாவு எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 2 நாட்களில் 1,035 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் முறையாக நேற்று 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா வைரசின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இதுவரை பாதிக்கப்படாத மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரியில் நேற்று கொரோனா வைரஸ் கால் பதித்தது. அங்கு 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் தற்போது பச்சை மண்டலமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 508 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முதன்மை கொரோனா பாதிப்பு இல்லை என்பது சற்று ஆறுதலான விஷயம் என்றாலும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதும், கடந்த 2 நாட்களில் 1,035 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் கவலைக்கு உரியதே.

சென்னையில் 2 பேர் பலி

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் ஒரு 3-ம் பாலினத்தவர் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் சென்னையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 858 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 74 ஆயிரத்து 961 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 174 மாதிரிகளில் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 596 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. இதில் 9 ஆயிரத்து 637 மாதிரிகள் 2-வது முறையாக மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

4 ஆயிரத்து 58 ஆக உயர்வு

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 508 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 58 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது தமிழக மருத்துவமனையில் 2 ஆயிரத்து 537 பேர் மட்டும் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

மேலும் 1,485 பேர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடித்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் 76 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

21 குழந்தைகள்

தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த 60 வயது பெண்ணும், நேற்று முன்தினம் 56 வயது ஆணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 21 குழந்தைகள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மருத்துவமனையில் 3 ஆயிரத்து 198 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 279 பேர்

கொரோனா வைரசால் நேற்று பாதிக்கப்பட்ட 508 பேரில், சென்னையில் 279 பேரும், கடலூரில் 68 பேரும், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 38 பேரும், விழுப்புரத்தில் 25 பேரும், திருவள்ளூரில் 18 பேரும், நாமக்கல் மாவட்டத்தில் 15 பேரும், திண்டுக்கல் மாவட்டத்தில் 7 பேரும், தேனியில் 5 பேரும், நீலகிரியில் 4 பேரும், கிருஷ்ணகிரியில் 2 பேரும், காஞ்சீபுரம், மதுரை, பெரம்பலூர், சேலம், தென்காசி, தர்மபுரி, நெல்லை, திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 106 ஆண் மற்றும் 107 பெண் என 213 குழந்தைகளும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 2 ஆயிரத்து 418 ஆண்கள், 1,089 பெண்கள் மற்றும் இரண்டு 3-ம் பாலினத்தவர்கள் என 3 ஆயிரத்து 509 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 221 ஆண்கள் மற்றும் 115 பெண்கள் என 336 பேரும் இதுவரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story