புலம் பெயர்ந்த மக்களின் இன்னல்கள் உங்கள் கண்களில் இன்னும் படவில்லையா? - மத்திய, மாநில அரசுகளுக்கு ப.சிதம்பரம் கேள்வி
புலம் பெயர்ந்த மக்களின் இன்னல்கள் உங்கள் கண்களில் இன்னும் படவில்லையா என்று மத்திய, மாநில அரசுகளிடம் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது 3-ம் கட்டமாக வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்ல அனுமதி சீட்டு வாங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் மக்கள் குடும்பத்துடன் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து சொந்த ஊருக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் புலம் பெயர்ந்த மக்களின் இன்னல்கள் குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தால் ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களை நோக்கி இன்னும் நடந்தே போகும் காட்சிகள் நெஞ்சை உலுக்குகின்றன
இந்த ஏழை மக்களின் துயரமும் அவர்கள் படும் இன்னல்களும் மத்திய, மாநில அரசுகளின் கண்களில் இன்னும் படவில்லையா?
இந்தக் கேள்விகளை மக்கள் கேட்கிறார்கள், நாங்களும் கேட்கிறோம். பதில் சொல்வதற்குத்தான் யாருமில்லை!" என்று பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story