மோடி முன்கூட்டியே துல்லியமாக திட்டமிட்டதால் கொரோனா நெருக்கடியை சிறப்பாக கையாண்டு வெற்றி பெற முடிந்தது - மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்


மோடி முன்கூட்டியே துல்லியமாக திட்டமிட்டதால் கொரோனா நெருக்கடியை சிறப்பாக கையாண்டு வெற்றி பெற முடிந்தது - மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்
x
தினத்தந்தி 7 May 2020 4:45 AM IST (Updated: 7 May 2020 1:30 AM IST)
t-max-icont-min-icon

மோடி முன்கூட்டியே துல்லியமாக திட்டமிட்டதால் இந்தியாவில் கொரோனா நெருக்கடியை சிறப்பாக கையாண்டு வெற்றி பெற முடிந்தது என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.


சென்னை, 

இதுதொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த டிசம்பர் மாதம் சீனா பாதிக்கப்பட்டபோதே கொரோனா பெருந்தொற்றின் மூலம் ஆபத்து வருவதை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோடி தான் என்பதை என்னால் கூறமுடியும். அந்த சமயத்தில் ஒரு நோயாளி கூட இந்தியாவில் இல்லை. கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி தான் இந்தியாவின் முதல் நோயாளிக்கு தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் இந்த தொற்று சீனாவோடு நிற்காது என்று அவர் ஒவ்வொரு மந்திரிசபை கூட்டம் முடிந்த பின்பும் எங்களிடம் கூறுவார்.

சில தினங்களுக்கு பின்னர் கொரோனா பரவல் அதிகமானதால் விமான, ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சந்தேகத்துக்கு இடமான பயணிகள் உள்துறை அமைச்சகத்தின் மானேசார் மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கும் என அந்த சமயத்தில் நாங்கள் புரிந்துகொண்டோம். அந்த நாள் முதல் இந்தியாவை கொரோனாவுக்கு எதிரான போருக்கு தயார்படுத்துவதற்காக அவர் தன்னுடைய திட்டங்களை செயல்படுத்தத்தொடங்கினார்.

700 ஆஸ்பத்திரிகள்

பிரத்யேகமாக கொரோனா ஆஸ்பத்திரிகள் என்ற ஒன்று அப்போது இல்லை. இப்போது கிட்டத்தட்ட 700 பிரத்யேக கொரோனா ஆஸ்பத்திரிகள் நம்மிடம் இருக்கின்றன. தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கவும், தைக்கவும் 39 தொழிற்சாலைகள் இந்தியாவில் உள்ளன. கிட்டத்தட்ட 22 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்கனவே வினியோகிக்கப்பட்டு உள்ளன. 8 மில்லியன் முக கவசங்கள் ஏற்கனவே வினியோகிக்கப்பட்டு விட்டன.

மேலும் பல பெரிய தொழிற்சாலைகள் ‘என்.95’ ரக முக கவசங்களை உற்பத்தி செய்யும் பணியை தொடங்கிவிட்டன. பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வீட்டிலேயே தயாரிக்கப்படும் முக கவசங்களை சிறு நிறுவனங்களும் தைத்து உற்பத்தி செய்கின்றன. கொரோனா பரிசோதனைகளை செய்யவும், முடிவுகளை வழங்கவும் கிட்டத்தட்ட 300 ஆய்வகங்கள் உள்ளன. ஒரு நாளைக்கு 80 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகளை தற்போது நாம் செய்யலாம். இந்திய தயாரிப்பாளர்களே செயற்கை சுவாச கருவிகளை செய்ய ஆரம்பித்து விட்டனர். உள்நாட்டிலேயே 30 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள் தயாரிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

கொரோனா நெருக்கடி

உலகத்துடனும் தொடர்பில் இருந்த மோடி, பல்வேறு தலைவர்களுடன் பேசினார். அவர்களுடைய அனுபவங்களையும், நம்முடைய அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். எவை எல்லாம் உபயோகமானவை என்று கருதினாரோ, அவற்றை எல்லாம் செயல்படுத்தினார். அதே சமயத்தில் பொது ஊரடங்கையும், அதன் தாக்கத்தையும் பற்றி யோசித்தார். இதன் காரணமாக ஏழைகளை பாதுகாக்க ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்புடைய ஒரு பெரிய தொகுப்பை அறிவித்தார். இதுபோன்ற பல நடவடிக்கைகள் மூலமாக மோடி முன்கூட்டியே திட்டமிட்டார். துல்லியமாக திட்டமிட்டு செயல்படுத்தினார். சிறப்பாக தொடர்புகொண்டார். உலகத்துக்கு தெரியப்படுத்தினார். இதனால் பல்வேறு இதர முன்னேறிய பொருளாதாரங்களை காட்டிலும், இந்தியாவில் கொரோனா நெருக்கடியை சிறப்பாக கையாண்டு வெற்றி பெற முடிந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story