நிபந்தனைகளை மீறினால் நிரந்தரமாக மூடப்படும்: தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடை இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு
தமிழக அரசு இன்று டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க தடை இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், நிபந்தனைகளை மீறும் மதுபானக் கடையை நிரந்தரமாக மூடவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கடைகள் ஒவ்வொன்றாக திறக்க அரசு அனுமதி வழங்கி வருகிறது. அரசு நடத்தி வரும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், ‘ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுபானக்கடைகள் தொடர்ச்சியாக 40 நாட்கள் மூடப்பட்டதால் குடிபழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து மீண்டுள்ளனர். ஆனால் தற்போது மதுபானக் கடைகளை இன்று முதல் மீண்டும் திறப்பதால், கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தீவிரம் இன்னும் அதிகரிக்கும்.
மது வாங்க வருபவர்கள் அரசு விதித்துள்ள கட்டுப் பாடுகளை பின்பற்ற மாட்டார்கள். மதுக்கடைகள் திறக்கப்பட்டால், குறைந்துள்ள குற்றச்சம்பவங்கள் எல்லாம் அதிகரிக்க தொடங்கிவிடும். அத்தியாவசிய பொருட் களை வாங்க வைத்திருக்கும் பணத்தை மது குடிக்க ஆண்கள் செலவு செய்து விடுவார்கள். இதனால் குடும்பம் நடத்த முடியாமல் பெண்கள் பலர் கடுமையான கஷ்டத்துக்கு உள்ளாவார்கள். எனவே, டாஸ்மாக் மதுக்கடைகளை இன்று முதல் திறக்க அனுமதிக்க கூடாது. கடை திறக்க தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இதுபோல, மக்கள் அதிகாரம், வக்கீல்கள் கே.பாலு, ராஜேஷ் உள்பட பலரும் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் நேற்று காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல், மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் வைகை, வக்கீல்கள் ராம்குமார் ஆதித்தன், கே.பாலு, ஜிம்ராஜ் மில்டன் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது நீதிபதிகள், ‘தமிழகத்தில் மது விற்பனையை ஆன்-லைன் மூலமும், வீடுகளுக்கு நேரடியாக சென்று மதுபாட்டில்களை ஊழியர்கள் விற்பனை செய்ய முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினர்.
இவ்வாறு மது விற்பனை செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறிய அட்வகேட் ஜெனரல், ‘சமூக இடைவெளியை கடைபிடித்து, தடுப்புகள் கட்டப்பட்டு, காலை 10 முதல் மதியம் 1 மணி வரை 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 1 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கும், பிற்பகல் 3 மணியில் இருந்து மாலை 5 மணி வரை 40 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் மது விற்பனை செய்யப்படும். வயது வாரியாக பிரிக்கப்பட்டு மதுபானங்கள் விற்கப்படுவதால், கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும். சென்னை மாநகரில் கொரோனா தொற்று அதிகம் உள்ளதால், இங்கு மதுக்கடைள் திறக்கப்படவில்லை.
அண்டை மாநிலங்களில் மதுக்கடை திறக்கப்பட்டு விட்டது. அதுபோல, தமிழகத்தில் மற்ற வியாபாரக் கடைகளை திறக்க அனுமதித்தது போலத்தான் மதுக்கடைகளையும் திறக்க அரசு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. மது பாட்டில்கள் மொத்தமாக விற்பனை செய்யப்படமாட்டாது. டோக்கன் வழங்கப்பட்டு ஒரு நபருக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே விற்கப்படும். மேலும் அரசின் இந்த கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையீடு செய்ய முடியாது. மதுபானக்கடைகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டதால், ஏற்கெனவே தமிழக அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர்கள் வக்கீல்கள் வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தடை விதிக்க முடியாது. அதேநேரம், இந்த கடைகளை திறக்க தமிழக அரசு விதித்துள்ள நிபந்தனைகளுடன், இந்த ஐகோர்ட்டும் கூடுதல் நிபந்தனைகளை விதிக்கிறது. இந்த நிபந்தனைகளை பின்பற்றி அரசு மது விற்பனை செய்யவேண்டும்.
ஒருவருக்கு 2 பாட்டில்
* ஒரு நபருக்கு அதிகபட்சம் (750 மி.லி கொண்ட) இரண்டு பாட்டில்களுக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது.
* ஒருவருக்கு 3 நாள் இடைவெளிவிட்டு வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும். ஒரு நபர் தினம்தோறும் மதுபாட்டில் வாங்க அனுமதிக்கக்கூடாது. இதற்காக மதுவாங்குவோரின் ஆதார் அட்டைகளை பெறவேண்டும். மது விற்பனைக்கு ரசீது வழங்கப்பட வேண்டும்.
மேலும், மதுக்கூடங்கள் (பார்கள்) அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். மதுபாட்டில்களை வாங்கியவர்கள், அவரவர் தங்களது வீடுகளுக்கு சென்று மது அருந்த அனுமதிக்க வேண்டும்.
கடை நிரந்தரமாக மூடல்
* அதிக விலைக்கு மது விற்பனை செய்வதையும், மொத்தமாக விற்பனை செய்வதையும் தடுக்கவேண்டும். அதற்காக ஆன்-லைன் மூலம் பணம் செலுத்தி, மது வாங்குவதை அரசு ஊக்குவிக்க வேண்டும். ஆன்-லைன் மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி, அந்த ரசீதுடன் டாஸ்மாக் கடைக்கு வருபவர்களுக்கு 750 மி.லி. மது பாட்டில்கள் இரண்டு அதிக பட்சமாக விற்பனை செய்யலாம். நேரடியாக பணம் கொடுத்து மது வாங்குபவர்ளுக்கு ஒரு (750 மி.லி) பாட்டில் மட்டுமே விற்பனை செய்யவேண்டும்.
* ஒவ்வொருவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு அந்த வரிசையின் அடிப்படையில் மது விற்பனை செய்ய வேண்டும்.
* இதுபோன்ற நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்றி டாஸ்மாக் ஊழியர்கள் மது விற்பனையை செய்ய வேண்டும். ஒருவேளை இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால், அந்த மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story