டாஸ்மாக் திறப்பு : 44 நாட்களுக்குப் பிறகு மது பாட்டில்கள்... மகிழ்ச்சியில் குடிமகன்கள்


டாஸ்மாக் திறப்பு : 44 நாட்களுக்குப் பிறகு மது பாட்டில்கள்... மகிழ்ச்சியில் குடிமகன்கள்
x
தினத்தந்தி 7 May 2020 11:28 AM IST (Updated: 7 May 2020 11:28 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைகளில் தொடங்கியது விற்பனை - 44 நாட்களுக்குப் பிறகு மது பாட்டில்களை தொட்ட மகிழ்ச்சியில் குடிமகன்கள்

சென்னை

கொரோனா தொற்றால் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் நாடு முழுவதும்  சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் தான் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக மராட்டியம் கர்நாடகா, டெல்லி மற்றும் அசாமில் மதுக் கடைகளைத் திறக்க அம்மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன. இதனால் இந்த மாநிலங்களில் கடத்த இரு நாட்களாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. காலை முதலே மது பிரியர்கள் வரிசையில் காத்து நின்று மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் பல இடங்களில் மதுக்கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல், அடித்து பிடித்துக்கொண்டு மக்கள் மதுவை வாங்கிச் செல்கின்றனர். இதனால் கரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் எழுந்து வருகின்றன.

கடந்த இரண்டு நாட்களாக கொரோனாவை விஞ்சி அதிகம் பேசப்படும் விஷயமாகியிருப்பது மதுபானக் கடையில் காணப்படும் கூட்டம்தான். கூட்டம் என்றால் வெறும் கூட்டமல்ல.. கட்டுக்கடங்காத கூட்டம்.

மதுபான பிரியர்கள் மதுபானக் கடைகள் திறக்கபட்டதை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

கர்நாடகத்தில் நேற்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே சுமார் ரூ.45 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. இந்த நிலையில், ஒரே நபர் ரூ.52,800க்கு மதுபானம் வாங்கிய ரசீது வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, ஒருவருக்கு கட்டுப்பாடுகளை மீறி அதிக மதுபானம் விற்றதாக விற்பனையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் அதிகபட்சமாக 2.6 லிட்டர் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானம் அல்லது 18 லிட்டர் பியர் தான் ஒரு நாளைக்கு ஒரு வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய வேண்டும். ஆனால் கட்டுப்பாடுகளை மீறி, தெற்கு பெங்களூருவில் உள்ள மதுபானக் கடையில் ஒரே நபருக்கு 13.5 லிட்டர் மதுபானமும், 35 லிட்டர் பியரும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

இது முழுக்க முழுக்க விதிகளுக்கு முரணானது.இது குறித்து வழக்குப் பதிவு செய்து, கடை உரிமையாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, 8 பேர் கொண்ட குழு இந்த மதுபானங்களை வாங்கியதாகவும், ஒரே ஒரு பண அட்டை மூலமாக தொகையை செலுத்தியதாகவும் கடை உரிமையாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே மங்களூருவில் ரூ.59,952க்கு மதுபானம் வாங்கிய ரசீதும் வலைத்தளங்களில் வைரலானது. 

இதையெல்லாம் விட அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில், ஒரே நபர் ரூ.95,347க்கு மதுபானம் வாங்கியிருக்கும் ரசீது சமூக வலைதளத்தில் வைரலானது. ஆனால், அதில் வாங்கப்பட்ட இடம் குறித்த தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன.

உத்தரபிரதேசத்தில் நேற்று ஒரே நாளில் 250 கோடி ரூபாய்க்குமேல்  மதுபானம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

மதுபானங்களை வீட்டிற்கே சென்று ஹோம் டெலிவரி செய்ய சத்தீஸ்கார் அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை மண்டலங்களில் உள்ள மக்கள் ஆன்லைன் வாயிலாகத் தங்களுக்குத் தேவையான மதுவை ஆர்டர் செய்தால், வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒருவர் அதிகபட்சமாக ஐந்து லிட்டர் வரை ஆர்டர் செய்யலாம் எனவும், டெலிவரி கட்டணமாக 120 ரூபாய் செலுத்தவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், எல்லைப்பகுதிகளில் உள்ள மக்கள் அதிக அளவில் அங்கு செல்வதை கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளதாக கூறி டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.அதன் படி இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.  காலை 10 மணிக்கு விற்பனை தொடங்கியது. எனினும், சில இடங்களில் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே விற்பனை தொடங்கப்பட்டது.

நீண்ட வரிசையில் காத்திருந்து குடிமகன்கள் மதுவை வாங்கிச்சென்றனர். ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு மதுபாட்டில்கள் வழங்கப்படும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல கடைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

44 நாட்களுக்குப் பிறகு மது பாட்டில்களை வாங்கிய குடிமகன்கள் மகிழ்ச்சியுடன் வெளியேறினர். ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையை காட்டினாலே மது பாட்டில்கள் வழங்கப்படுகின்றன.

கோவை தொண்டாமுத்தூரில் பொதுமக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கிடகுளத்தில் அரசு மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story