தியாகராஜ சுவாமிகள் பிச்சை எடுத்தார் என்று சொல்வதா? - கமல்ஹாசனுக்கு ஜி.கே.வாசன் தலைமையிலான குழு கண்டனம்
தியாகராஜ சுவாமிகள் பிச்சை எடுத்தார் என்று கமல்ஹாசன் கூறியதற்கு ஜி.கே.வாசன் தலைமையிலான குழுவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை தலைவராக கொண்டு செயல்படும் திருவையாறு தியாக பிரம்ம மஹோத்சவ சபா நிர்வாக குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தனது வாழ்நாளில் 96 கோடி முறை ராமநாமம் சொல்லி சாதனை புரிந்த மகான் சத்குரு தியாகராஜ சுவாமிகள். வால்மீகி முனிவரின் மறுபிறவி என்று போற்றப்படும் தியாக பிரம்மத்தை நடிகர் கமல்ஹாசன் திடீரென்று உதாரணமாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. உஞ்சவிருத்தி என்பது பிச்சையல்ல.
அது ஒரு பாகவத தர்மம் பக்தி என்பது கமல் ஹாசனுக்கு தெரிய நியாயமில்லை. கழுத்தில் ஒரு செம்புடன் கீர்த்தனைகளை பாடிவரும் இவர்களுக்கு பொதுமக்கள் தானியங்களை அளிப்பார்கள், செம்பு நிறைந்தவுடன் வீட்டிற்குத் திரும்பி வந்து, அந்த தானியத்தில் உணவு தயாரித்து சுவாமிக்கும் படைத்து, தனது பக்தர்களுக்கும், சிஷ்யர்களுக்கும் பகிர்ந்து அளித்து உண்பார்கள் அடுத்த நாளுக்குத் தேவையென்று கூட அதிகம் சேர்க்க மாட்டார்கள். இப்படி ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்த மகான் தியாகராஜசுவாமிகளை ஒரு பேட்டியின் நடுவே போகிறபோக்கில் பிச்சை எடுத்தார் என்று கூறி பேசியுள்ளார் கமல்ஹாசன்.
சத்குரு சுவாமிகள் ஒன்றும் பொருள் சேர்க்க முடியாதவர் அல்ல. தியாக பிரம்மம் மறைந்து 173 வருடங்கள் ஆனாலும், அவரது கீர்த்தனைகள், இசை கலைஞர்கள் உருவாவதற்கும் செய்த செயல்தான் இன்றளவும் அவரை நினைத்து, வணங்கி உலகளவில் உள்ள பல்வேறு இசைதுறையை சார்ந்த பெரிய பெரிய வித்வான்கள் மற்றும் வித்வாம்ஸினிகள் எல்லோரும், ஒரு மாபெரும் கடமையாக கருதி, வருடா வருடம் அவர்களது சொந்த செலவிலேயே திருவையாற்றில் உள்ள அவரது சமாதிக்கு வந்து ஆராதனை விழாவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மன்னர் சரபோஜி, பொன்னும், பொருளும் கொடுத்து அவரது அரசவைக்கு அழைத்தபோதும் மறுத்து, ராமநாமம் பாடுவது மட்டுமே தனது யாகம் என்று வாழ்ந்தவர்.
கீர்த்தனையிலேயே, பணம் தனக்கு சுகம் தராது என்பதை வெகு விளக்கமாக அன்றே கூறிவிட்டார். எனவே திருவையாறு தியாக பிரம்ம மஹோத்சவ சபா சார்பிலும். இசைக்கலைஞர்கள் சார்பிலும் கமல்ஹாசனுக்கு வருத்தத்துடன் பதிவு செய்து கொள்கிறோம். அவர் தெரிவித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story