கமிஷனர் அலுவலகத்தில் மேலும் 2 பேர் பாதிப்பு: உதவி போலீஸ் கமிஷனர், தாசில்தாரை தாக்கியது கொரோனா - தடுப்பு நடவடிக்கை பற்றி கமிஷனர் பேட்டி


கமிஷனர் அலுவலகத்தில் மேலும் 2 பேர் பாதிப்பு: உதவி போலீஸ் கமிஷனர், தாசில்தாரை தாக்கியது கொரோனா - தடுப்பு நடவடிக்கை பற்றி கமிஷனர் பேட்டி
x
தினத்தந்தி 7 May 2020 9:45 PM GMT (Updated: 7 May 2020 8:35 PM GMT)

சென்னையில் உதவி போலீஸ் கமிஷனர் மற்றும் தாசில்தாரை தாக்கி கடும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள கொரோனாவை சித்த வைத்திய முறையில் தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்னை, 

கொரோனாவின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை போலீசில் ஏற்கனவே 50 பேரை தாக்கி உள்ளது. நேற்று மேலும் 5 பேரை தாக்கியது. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்கனவே 4 பேர் பாதிப்பில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று கமிஷனர் அலுவலகத்தில் உளவுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டரும், போலீஸ்காரர் ஒருவரும் கொரோனாவால் தாக்கப்பட்டார்கள்.

திருமுல்லைவாயல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர், பரங்கிமலை ஆயுதப்படை பெண் காவலர் மற்றும் பூக்கடை உதவி போலீஸ் கமிஷனரும் தாக்குதலில் நேற்று சிக்கினார்கள். இதனால் சென்னை போலீசில் கொரோனாவில் சிக்கியவர்கள் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது.

மேலும் சென்னையில் நேற்று தாசில்தார் ஒருவரும் கொரோனாவிடம் மாட்டினார். கோயம்பேடு மார்க்கெட் ஊழியர்கள் 3 பேர், ஏழுகிணறு பகுதியில் கிருமிநாசினி தெளித்த ஊழியர் ஆகியோருக்கும் நேற்று தொற்று உறுதியானது.

இந்த நிலையில் கொரோனாவின் தாக்குதலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை சென்னை எழும்பூர் நரியங்காடு போலீஸ் குடியிருப்பு மற்றும் புதுப்பேட்டை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு ஆகிய இடங்களில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

அங்கு வசிப்பவர்களுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் மற்றும் அதிமதுர குடிநீர் வழங்கினார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், கொரோனா தொற்றை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த வைத்திய மற்றும் இயற்கை வைத்திய முறைப்படி நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். அவருடன் கூடுதல் கமிஷனர் ஜெயராம், துணை கமிஷனர் விமலா ஆகியோர் இருந்தார்கள்.

Next Story