11-ந்தேதி முதல் அனுமதி: சினிமா, டெலிவிஷன் துறைக்கு கட்டுப்பாடுகள் தளர்வு -எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை வேலைகளை தொடங்கலாம்
சினிமா, டெலிவிஷன் துறைகளில் தயாரிப்புக்கு பிந்தைய பணிகளுக்கு வருகிற 11-ந் தேதி முதல் அனுமதி அளிப்பதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை போன்ற வேலைகளை தொடங்கலாம்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும், கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளதால், இத்தருணத்தில் தயாரிப்புக்குப் பிந்தைய போஸ்ட் புரடெக்சன் பணிகளை செய்வதற்காக மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளை மட்டும் வருகிற 11-ந் தேதி முதல் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார்.
அதன்படி, படத் தொகுப்பு (எடிட்டிங்), குரல் பதிவு (டப்பிங்) ஆகிய பணிகளுக்கு அதிகபட்சம் தலா 5 பேரும், கம்ப்யூட்டர் மற்றும் விஷூவல் கிராபிக்ஸ் பணிக்கு 10 முதல் 15 பேரும், டி.ஐ. எனப்படும் நிற கிரேடிங், பின்னணி இசை, ஒலிக்கலவை பணிகளுக்கு அதிகபட்சம் தலா 5 பேரும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, போஸ்ட் புரடெக்சன் பணிகளை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள், இப்பணியில் ஈடுபடுகின்ற பணியாளர்களுக்கு உரிய அனுமதி சீட்டுகளை பெற்றுத் தந்து, அவர்கள் சமூக இடைவெளியுடனும், முககவசம் மற்றும் கிருமி நாசினி உபயோகித்தும், மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை பின்பற்றியும் பணி செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாரதிராஜா, எஸ்.தாணு, டி.ஜி.தியாகராஜன், கேயார், முரளிதரன், டி.சிவா, கே.ராஜன், சீனிவாசன், தேனப்பன், கதிரேசன் உள்ளிட்ட பலர் கூட்டாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“கொரோனாவின் பாதிப்பினால் 50 நாட்களுக்கு மேலாக தமிழ் திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. ‘போஸ்ட் புரடெக்சன்’ பணிகளுக்கு அனுமதி வழங்கினால், ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து 50 நாட்களாக காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் அவைகளை முடித்து, படங்களை தயார் செய்ய முடியும் என்று தங்களிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அதனை ஏற்று உடனே நடவடிக்கை எடுத்து, தமிழ் திரைப்பட துறை தயாரிப்புக்கு பிந்தைய பணிகளை வருகிற 11-ந்தேதி முதல் செய்து கொள்ள தாங்கள் அனுமதி அளித்து, தமிழ் சினிமாவை காக்கும் செயலை செய்ததற்காக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.”
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி, சின்னத்திரை சங்கம் சார்பில் நடிகை குஷ்பு, சுஜாதா விஜயகுமார் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story