வளர்ந்த நாடுகளை போன்ற மோசமான பாதிப்பு இந்தியாவில் இருக்காது-மத்திய சுகாதாரத்துறை மந்திரி நம்பிக்கை
வளர்ந்த நாடுகளை போன்ற மோசமான பாதிப்பு இந்தியாவில் இருக்காது என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கொரோனா பெருந்தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வளர்ந்த நாடுகளைப் போன்றதொரு சூழலை, இந்தியாவில் நான் எதிர்பார்க்கவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்திய ஹர்ஷ்வர்தன் அப்போது கூறியதாவது: கொரோனாவால் வளர்ந்த நாடுகளில் ஏற்பட்டது போல மோசமான பாதிப்பு இந்தியாவில் வரும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. எனினும், ஒட்டு மொத்த இந்தியாவிலும் மோசமான சூழல் ஏற்பட்டாலும் சமாளிப்பதற்கான தயார் நிலையை மேற்கொண்டுள்ளோம்.
நாடு முழுவதும் 8,043 மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 7,640 தனிமை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவும், அயல்நாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்களையும் தனிமைப்படுத்த இந்த முகாம்கள் பயன்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இதுவரை 69 லட்சம் என்.95 முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 32.76 லட்சம் பிபிஇ கருவிகளும் அனுப்பப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட இறப்பு விகிதம் 3.3 சதவிகிதமாக உள்ளது. குணமடைவோர்கள் விகிதம் 29.9 சதவிகிதமாக உள்ளது. இவை நல்ல அறிகுறிகளாக இருக்கின்றன. தொற்று இரட்டிப்பாவது கடந்த 3 நாட்களாகக் குறைந்துள்ளது. 0.38 சதவீத நோயாளிகள் மட்டுமே வெண்டிலேட்டரில் உள்ளனர். 1.88 சதவிகித நோயாளிகளுக்கு மட்டுமே ஆக்ஸிஜன் உதவி தேவைப்படுகிறது” என்றார்.
Related Tags :
Next Story