சென்னையில் மேலும் 4 போலீஸ்காரர்களை கொரோனா தாக்கியது


சென்னையில் மேலும் 4 போலீஸ்காரர்களை கொரோனா தாக்கியது
x
தினத்தந்தி 10 May 2020 3:15 AM IST (Updated: 10 May 2020 1:13 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மேலும் 4 போலீஸ்காரர்களை கொரோனா தாக்கியது.

சென்னை, 

கொரோனா நோய்த்தொற்று உள்ள இடங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு, அங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தீயணைப்பு வீரர்கள் கிருமிநாசினி கலந்த தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் போலீஸ்காரர்கள், தீயணைப்பு வீரர்களும் கொரோனா பிடியில் சிக்கி வருகிறார்கள். கொரோனாவின் கூடாரமாக செயல்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்பு பணியை கண்காணித்த துணை போலீஸ் கமிஷனர் உள்பட போலீஸ்காரர்களையும் கொரோனா தாக்கியது.

2 உதவி கமிஷனர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். டி.ஜி.பி. அலுவலக போலீசாரும் கொரோனா பிடியில் சிக்கினர். சென்னையில் போலீஸ்துறையை சேர்ந்த 67 பேர் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகினர். இதில் கொரோனாவின் பிடியில் இருந்து துணை கமிஷனர் உள்பட சில போலீஸ்காரர்கள் மீண்டு உள்ளனர். தற்போது டாக்டர்கள் அறிவுரையின்படி அவர்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி உள்ளனர்.

எப்படி தாக்கியது?

இந்தநிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக மத்திய குற்றப்பிரிவு போலீஸ்காரர், பல்லாவரம் போலீஸ்காரர், புதுப்பேட்டை ஆயுதப்படை போலீசார் 2 பேர் என 4 போலீஸ்காரர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ்காரரும், பல்லாவரம் போலீஸ்காரரும் கொரோனா தொற்று கட்டுப்பாடு பகுதிகளில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வந்தவர்கள்.

ஆயுதப்படை போலீசார் 2 பேரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

தற்போது 4 போலீஸ்காரர்களும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் குடும்பத்தினரும், அவர்களுடன் பணியாற்றிய போலீஸ்காரர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். தற்போது கொரோனா பாதித்த போலீஸ் காரர்கள் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்து உள்ளது.


Next Story