மருத்துவ பட்டமேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 3.8 சதவீத இடங்கள் ஒதுக்கிய பரிதாபநிலை - கி.வீரமணி அறிக்கை


மருத்துவ பட்டமேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 3.8 சதவீத இடங்கள் ஒதுக்கிய பரிதாபநிலை - கி.வீரமணி அறிக்கை
x
தினத்தந்தி 9 May 2020 9:00 PM GMT (Updated: 9 May 2020 7:48 PM GMT)

மருத்துவ பட்டமேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 3.8 சதவீத இடங்கள் ஒதுக்கியது பரிதாபநிலை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை, 

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 9 ஆயிரத்து 550 இடங்களில் 7,125 இடங்கள் பொதுப்பிரிவிற்கு (74.6 சதவீதம்) சென்றுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்த இடங்கள் வெறும் 371 தான். சதவீத அளவில் சொல்ல வேண்டுமானால், வெறும் 3.8 சதவீதம் மட்டுமே. தாழ்த்தப்பட்டோருக்கு (எஸ்.சி.) கிடைத்த இடங்கள் 1,385 (14.5 சதவீதம்), பழங்குடியினருக்கு (எஸ்.டி.,) 669 இடங்கள்(7 சதவீதம்) ஒதுக்கப்பட்டுள்ளன.

தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதால் இந்த அளவுக்காவது இடங்கள் கிடைத்தன. பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதால் வெறும் 3.8 சதவீதம் என்னும் அளவுக்கு அடிமட்டத்துக்கு ஒதுக்கித்தள்ளப்பட்டுள்ள பரிதாப நிலை. கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை என்பது போல, மருத்துவக்கல்லூரியில் பட்டமேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அறவே இல்லை. கிடையவே கிடையாது என்று அடம்பிடிக்கப்படுகிறது.

இது இந்திய அரசமைப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட சமூகநீதிக்கு எதிரானது என்பது மட்டுமல்ல. மக்கள்தொகையில் பெரும் பகுதியினருக்கு எதிரான ஜனநாயக படுகொலை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நாடாளுமன்றத்தில் கட்சிக்கு அப்பாற்பட்டு சமூகநீதி சக்திகள் ஒருங்கிணைந்து இந்த அநீதிக்கு, அப்பட்டமான சட்டமீறலுக்கு ஒரு முடிவை காண்பது அவசியம்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Next Story