நாளை முதல் செயல்படத் தொடங்கும் திருமழிசை காய்கறி மார்க்கெட்டில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு
திருமழிசை தற்காலிக காய்கறி மார்க்கெட் நாளை முதல் செயல்பட தொடங்குகிறது. அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார்.
சென்னை,
ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டுகளில் ஒன்றான கோயம்பேடு, கொரோனாவின் கூடாரமாக மாறியது. கோயம்பேட்டில் பணியாற்றிய தொழிலாளிகள் மூலம் கடலூர், விழுப்புரம், அரியலூர் உள்பட வட மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் கொட்டத்தை அடக்கும் நடவடிக்கையாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட் கடந்த 5-ந்தேதி அதிரடியாக பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. இதையடுத்து பூ மற்றும் பழம் மார்க்கெட் மாதவரம் புதிய பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
காய்கறி மார்க்கெட் சென்னையை அடுத்த திருமழிசைக்கு மாற்றப்படும் என்றும், அங்கு விற்பனை கடந்த 7-ந்தேதி தொடங்கப்படும் என்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) அறிவித்தது.
திருமழிசையில் 200 கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு கடைக்கும் இடையே இடது புறம் 10 அடி, வலது புறம் 10 அடி என 20 அடி இடைவெளி விடப்பட்டு உள்ளது. கடைகளை அமைக்கும் பணியில் இரவு-பகலாக 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கோயம்பேடு போன்று திருமழிசையும் கொரோனாவின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதில் அரசு தனி கவனம் செலுத்தி உள்ளது.
எனவே திருமழிசையில் வியாபாரிகள், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். திருமழிசையில் திட்டமிட்டபடி காய்கறிகள் விற்பனை தொடங்காததால் சென்னையில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக காய்கறி விலை கணிசமாக உயர்ந்தது.
வீடுகளை தேடிவந்த நடமாடும் காய்கறி வண்டிகள் சரிவர வாராததால் மக்கள் தங்கள் பகுதியில் உள்ள சந்தைகளுக்கு சென்று காத்திருந்து காய்கறி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருமழிசை பகுதியில் காய்கறி மொத்த மார்க்கெட் அமைக்கும் பணியை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். பணிகள் முடிந்த கடைகளையும், பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள கடைகளையும் அவர் பார்வையிட்டார். அங்கு அமைக்கப்பட்டு உள்ள சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறி ஏற்றி வரும் வாகனங்கள் எந்த வழியாக அனுமதிக்கப்படும்? காய்கறி வாங்க வரும் சிறு வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? சுமை தூக்கும் தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள் தங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? உள்ளிட்ட விவரங்களை முதல்-அமைச்சர் கேட்டறிந்து, சில ஆலோசனைகளையும் அதிகாரிகளுக்கு வழங்கினார்.
பண பரிமாற்றம் அதிகம் நடைபெறும் என்பதால் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.
சுமார் 30 நிமிடம் ஆய்வுக்கு பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முதல்-அமைச்சர் ஆய்வு செய்தபோது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், பெஞ்சமின், தலைமை செயலாளர் க.சண்முகம், வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உள்பட அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.
நாளை (திங்கட்கிழமை) முதல் திருமழிசை காய்கறி மார்க்கெட் இயங்க உள்ளது.
கோயம்பேடு போன்று திருமழிசை மாறிவிடக் கூடாது என்பதற்காக பொதுமக்கள் காய்கறிகள் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். மொத்த வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் காய்கறிகள் வரத்தொடங்க உள்ளது.
திருமழிசை காய்கறி மார்க்கெட் செயல்பட தொடங்கியதும் சென்னையில் காய்கறி தட்டுப்பாடு நீங்கி, அவற்றின் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story