ரேஷன் கடைகளில் வழங்க 5.34 லட்சம் டன் இலவச அரிசி - தமிழகத்துக்கு, மத்திய அரசு வழங்கியது
ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசி திட்டத்திற்காக தமிழகத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான 5.34 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு இந்திய உணவு கழகம் மூலம் தமிழகத்திற்கு இலவசமாக வழங்கியது.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 24-ந் தேதிமுதல் நாடு தழுவிய அளவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் உணவு தானியங்கள் வழங்குவதற்காக பிரதம மந்திரியின் ஏழைகள் நலன் காக்கும் உணவு வழங்கல் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன் மூலம் மாநிலத்தில் சுமார் 3.60 கோடி குடும்ப அட்டை பயனாளிகளுக்கு கடந்த ஏப்ரல் முதல் வருகிற ஜூன் மாதம் வரை ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரிசி கூடுதலாக ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதற்காக மாதம் ஒன்றுக்கு 1.78 லட்சம் டன் வீதம் 3 மாதத்திற்கு 5.34 லட்சம் டன் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதில் இதுவரை 4.35 லட்சம் டன்களை நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வினியோகத்திற்காக இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. ஜூன் மாதத்திற்கு தேவையான மீதம் உள்ள அரிசியும் வழங்கப்பட்டு உள்ளது.
விவசாயிகளிடம் கொள்முதல், சேமிப்பு, போக்குவரத்து போன்றவற்றின் மூலம் ஒரு கிலோ அரிசிக்கு ரூ.37.48-ம், கோதுமைக்கு ரூ.26.78-ம் மத்திய அரசு செலவிடுகிறது. ஆனால் பிரதம மந்திரியின் ஏழைகள் நலன் காக்கும் உணவு வழங்கல் திட்டத்தின் கீழ் எந்தவித விலையும் இல்லாமல் தமிழகத்திற்கு இலவசமாக வழங்குகிறது.
இந்த திட்டத்தின் மூலம் கடந்த 3 மாதங்களில் மட்டும் மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான அரிசியை தமிழகத்திற்கு ஒதுக்கி இருக்கிறது. தேசிய உணவு பாது காப்புச் சட்டத்தின்கீழ் வழக்கமாக தமிழகத்திற்கு வழங்கும் ஒதுக்கீட்டை விட அதிகமாகும்.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் வினியோகத்திற்கு மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் 2.93 லட்சம் டன் அரிசி மூட்டைகள், 15 ஆயிரம் டன் கோதுமை மூட்டைகள் வழங்கி வருகிறது. இதற்காக மத்திய அரசு ரூ.981 கோடி கூடுதலாக செலவிடுகிறது.
ரேஷன் கடைகளை பொதுமக்கள் நம்பி இருப்பதால், இந்திய உணவு கழக ஊழியர்கள் முழுமையாக பணியாற்றி ரெயிலில் வரும் உணவு பொருட்களை இறக்குதல், ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை சமூக இடைவெளியில் செய்து வருகின்றனர்.
மேற்கண்ட தகவலை இந்திய உணவு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டி.வி.பிரசாத் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story